திருட்டு வழக்கில் கைதான வாலிபர் மர்மச்சாவு: போலீஸார் அடித்ததால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு
உயிரிழந்த தினேஷ்குமார்
உயிரிழந்த தினேஷ்குமார்

சென்னையில் செல்போன் பறிப்பில் கைது செய்யப்பட்ட வாலிபர் கண்ணகி நகர் போலீஸார் அடித்து உதைத்ததால் உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டீபன் கிளோடியோ(21). இவர் நேற்று மாலை துரைப்பாக்கம் அருகே பேருந்தில் சென்ற போது அவரிடமிருந்து செல்போனை இருவர் பறித்துக் கொண்டு தப்பியோடினர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஸ்டீபன் கிளோடியோ விரட்டிச் சென்றார். அதில் சிக்கிய ஒருவரைப் பிடித்து கண்ணகி நகர் சுங்கச்சாவடி போலீஸில், ஸ்டீபன் கிளோடியோ ஒப்படைத்தார்.

போலீஸார்நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பெரம்பூர் நீளம் கார்டன் மூணாவது தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார்(26) என்பது தெரிய வந்தது. அவர் மீது கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை உட்பட பல காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு, கொலைமிரட்டல் உள்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

மேலும் ஸ்டீபனிடம் பறித்த செல்போனை தனது கூட்டாளி ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாக தினேஷ்குமார் கூறினார். இதையடுத்து தினேஷ்குமாரின் மனைவி கௌசல்யாவை தொடர்பு கொண்ட போலீஸார், செல்போன் திருட்டு வழக்கில் உனது கணவரைப் பிடித்து வைத்துள்ளோம் என்றும், அவரது நண்பரிடம் இருந்து செல்போனை வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

இதனால் தினேஷ்குமார் மனைவி கௌசல்யா, தாய் இருவரும் ராமச்சந்திரனிடம் இருந்த செல்போனை வாங்கி வந்து கண்ணகி நகர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். செல்போன் கிடைத்ததால் புகார் வேண்டாம் என ஸ்டீபன் கிளோடியோ எழுதிக் கொடுத்தார்.இதனால் தினேஷ்குமாரை எச்சரித்து அவரிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரது மனைவி, தாயிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

பின்னர் வீட்டிற்குச் சென்ற தினேஷ்குமார் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதனால் அவரை குடும்பத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதன் பின் வீட்டிற்கு வந்துள்ளனர். இதன் பிறகு சாப்பிட்டு விட்டு உறங்கிய தினேஷ்குமாருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சுய நினைவின்றி கீழே விழுந்துள்ளார்.

அவரை உடனடியாக உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ்குமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் தொடர்பாக திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நடத்தினர்.

அப்போது நடத்திய விசாரணையில், உயிரிழந்த தினேஷ்குமார், விவாகரத்து பெற்றிருந்த கௌசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு, ஒரு மாதமாக பெரம்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரிய வந்தது. ஹோட்டல்களில் சிமினி சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்த தினேஷ்குமார், கூலி வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் செல்போன் திருட்டு வழக்கில் தினேஷ்குமாரை கண்ணகி நகர் போலீஸார் அடித்து உதைத்ததால் தான் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி அவரது சகோதரர் செந்தில்குமார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

இதையடுத்து சந்தேக மரணம் என போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எழும்பூர் 10-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் லட்சுமி தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in