38 எம்.பிக்களுடன் டெல்லிக்கு படையெடுங்கள்; மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் யோசனை!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி38 எம்.பிக்களுடன் டெல்லிக்கு படையெடுங்கள்; மேகேதாட்டு விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈபிஎஸ் யோசனை!

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட எடுத்துவரும் முயற்சிகளை தடுக்க தமிழகத்தின் 38 எம்.பிக்களுடன் டெல்லி செல்லுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் டெல்டா பகுதிகளை காப்பாற்ற, மேகேதாட்டு பகுதியில் அணைகட்ட முயற்சிக்கும் காங்கிரஸ் அரசின் முயற்சியினை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் இந்த செயலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பெயரிலேயே கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

கர்நாடக அரசின் இந்த அணை கட்டும் முயற்சியை முறியடிக்க தமிழகத்தில் உள்ள 38 எம்.பி-களையும் அழைத்துக்கொண்டு டெல்லிக்கு படை எடுங்கள். மேலும் அணை கட்டுவதை தடுக்கவும், தமிழகத்திற்கு உரிய உரிமையினை பெறவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தில் நிலவி வரும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in