சென்னையில் மாரத்தான் தொடங்கியது: அமைச்சர்கள், டிஜிபி பங்கேற்பு

சென்னையில் மாரத்தான் தொடங்கியது: அமைச்சர்கள்,  டிஜிபி பங்கேற்பு

சென்னை மாரத்தான் போட்டிகள் திட்டமிட்டபடி இன்று அதிகாலை தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தது மட்டுமன்றி போட்டியிலும் பங்கேற்றார். 

சர்க்கரை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், அதற்காக நிதி திரட்டுவதற்காகவும் சென்னை மாரத்தானின் 11-ஆவது பதிப்பு போட்டிகள் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை மராத்தான் போட்டிகள்  தொடங்கின. நேப்பியர் பாலத்தில் இருந்து போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் முழு மாரத்தான் (42 கி.மீ.), பெர்ஃபெக்ட் மைலர் (32 கி.மீ. ), அரை மாரத்தான்(21 கி.மீ) மற்றும் மினி மாரத்தான்(10 கிமீ) என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 10 கி.மீ ஓட்டம் மட்டும் தரமணி சிபிடி மைதானத்தில் முடிவடைகிறது. மற்ற 3 பிரிவுகளும் ஈசிஆர் சாலையில் உள்ள உத்தண்டி இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முடிவடைகிறது.

இந்த போட்டிகளில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோ தங்கராஜ், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 20 ஆயிரம் பேர் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் முதல்முறையாக பார்வை குறைபாடுள்ள 30 வீரர்கள், 50 பிளேடு ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் 50 சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

மாரத்தான் போட்டிகளையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டிகளில்  வெற்றி பெறுவோருக்கு மொத்தம் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in