கட்சித் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: காங்கிரஸில் எழும் அதிருப்திக் குரல்கள்

கட்சித் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும்: காங்கிரஸில் எழும் அதிருப்திக் குரல்கள்

காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் அக்டோபர் 17-ல் நடக்கும் என அக்கட்சியின் செயற்குழு அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்திருக்கின்றன. இந்நிலையில், ‘கடந்த தேர்தலில்தான் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை. இந்தத் தேர்தலிலாவது அது பின்பற்றப்படுமா?’ என அக்கட்சித் தலைவர்கள் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இதற்கு முன் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடந்தது 2000-ம் ஆண்டில். அதில் சோனியா காந்திக்கு எதிராக ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக ஜிதேந்திர பிரசாதா குற்றம்சாட்டினார். குறிப்பாக மாநில காங்கிரஸ் கட்சி அமைப்புகளின் (பிசிசி) பிரதிநிதிகள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக, ஜிதேந்திர பிரசாதா தரப்பு குற்றம்சாட்டியது. கட்சித் தலைவர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற பிசிசி உறுப்பினர்களின் பட்டியலில், போலியான பெயர்கள் இருந்ததாகவும், பிரதிநிதிகளின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. அந்தத் தேர்தலில் சோனியா காந்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தப் புகார்கள் அதிகம் பேசப்படவில்லை.

2014 மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது. 2017-ல் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியது போன்ற நிகழ்வுகளால் அதிருப்தியடைந்த 23 தலைவர்கள், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்; நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்குக் கடிதம் எழுதினர். சமீபத்தில் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் முதல் ஜிதின் பிரசாதா (ஜிதேந்திர பிரசாதாவின் மகன்) வரை 23 பேர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருந்ததால் ஜி-23 தலைவர்கள் என அவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்களில் ஜிதின் பிரசாதா, அஷ்வனி குமார், குலாம் நபி ஆசாத் ஆகிய மூன்று தலைவர்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர்.

இந்நிலையில், அக்குழுவைச் சேர்ந்த முக்கியத் தலைவரான மணீஷ் திவாரி, கட்சித் தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் குரல் எழுப்பியிருக்கிறார்..

“வாக்களிக்கவிருக்கும் பிரநிதிதிகளின் பட்டியல் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் எப்படி நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடக்கும்?” என அவர் எழுப்பியிருக்கும் கேள்வி காங்கிரஸுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருப்பவர்களின் பெயர்கள் கட்சி இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணீஷ் திவாரி
மணீஷ் திவாரி

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், ஜி-23 குழுவைச் சேர்ந்த இன்னொரு தலைவரான ஆனந்த் சர்மாவும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். பிசிசி-யில் ஏறத்தாழ 9,000 பேர் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், அவர்கள் யார் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறினார்.

எனினும், தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்படாது என்று விளக்கமளித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மத்தியத் தேர்தல் குழுவின் தலைவரான மதுசூதன் மிஸ்திரி. இதுதொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அவர், “தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்களின் விவரம் பிசிசி-யிடம் இருக்கும். தேவைப்படுபவர்கள் அங்கு சென்று விவரம் தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் பொதுமக்களுக்கானவை அல்ல” எனத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், மணீஷ் திவாரி இதை ஏற்கவில்லை. தலைவர் தேர்தலில் வாக்களிப்பவர்களின் விவரங்கள் காங்கிரஸ் இணையதளத்தில் கண்டிப்பாக வெளியிடப்பட வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். கார்த்தி சிதம்பரம், சசி தரூர் போன்ற தலைவர்களும் மணீஷ் திவாரியின் கருத்தை ஆதரித்திருக்கிறார்கள்.

மறுபுறம், சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவாளர்கள் மணீஷ் திவாரிக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

“மணீஷ் திவாரி தனது வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் மூலம் பலனடைந்தவர். கேள்வி எழுப்புவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அது குறித்து சமூகவலைதளத்தில் பகிரங்கமாகப் பதிவிடுவது, அதுவும் சோனியா காந்தி தனது தாயை இழந்திருக்கும் தருணத்தில் இழந்திருக்கும் நேரத்தில் இப்படிச் செய்வது சரியா? இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவரிடம் கேள்வி எழுப்புகிறார் மணீஷ் திவாரி” என காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் மூத்த தலைவருமான சஜ்ஜன் சிங் வர்மா கூறியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in