‘மியான்மர் எல்லையில் வேலி கூடாது’ மணிப்பூர் பழங்குடி கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு

எல்லையில் வேலி - மாதிரி படம்
எல்லையில் வேலி - மாதிரி படம்

இந்தியாவுடனான மியான்மர் தேசத்தின் எல்லை நெடுக வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூர் எல்லையில் அவ்வாறு வேலி அமைப்பதற்கு மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் அண்டை தேசங்களில் மியான்மரும் ஒன்று. ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் அதற்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அவ்வப்போது உச்சம் தொடுவதும் வழக்கம். அம்மாதிரியான தாக்குதலில் பின்னடைவை சந்திக்கும் ராணுவ வீரர்கள் இந்தியாவின் மிசோரம் போன்ற மாநிலங்களின் எல்லைக்குள் தஞ்சமடைவது தொடர்ந்து வருகிறது. அது மட்டுமன்றி, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் கிளர்ச்சியில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மியான்மர் எல்லைக்குள் சென்று பதுங்கிக்கொள்வது தொடர்ந்து வருகிறது.

இந்தியாவுடனான மியான்மர் எல்லை
இந்தியாவுடனான மியான்மர் எல்லை

அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்கள், மியான்மர் நாட்டுடன் 1,643 கி.மீ. எல்லைப் பகுதியைப் பகிர்ந்து கொள்கின்றன. அவ்வாறு இந்தியா - மியான்மர் இடையிலான எல்லைப்பகுதியில் வாழ்வோர் தங்களுக்குள் உறவுமுறை பாராட்டுவது பல தலைமுறைகளாக தொடர்ந்து வருகிறது.

இதனையொட்டி 1970களில், சுதந்திர இயக்கத்திற்கான ஆட்சி என்ற பெயரில், சுமார் 16 கிமீ தொலைவுக்கு விசா நடைமுறைகள் இன்றி பரஸ்பரம் புழங்குவதற்கு இரு நாட்டினரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சலுகையை பயன்படுத்தியே, மிசோரமுக்குள் மியான்மர் ராணுவத் துருப்புகள் ஊடுருவதும், மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மியான்மர் எல்லைக்கு தப்பிச் செல்வதும் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு மியான்மர் எல்லை நெடுக தொடரும் தொல்லைகளைத் தவிர்க்க, “பங்களாதேஷ் தேசத்துடனான இந்திய எல்லை தடுப்பு வேலியுடன் பராமரிக்கப்படுவதைப் போன்று, மியான்மருடனான எல்லையும் இனி தடுப்புவேலி பாதுகாப்புக்கு உட்படும்” என உள்துறை அமைச்சர் அமித் ஷா அண்மையில் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய - மியான்மர் எல்லையில் பரஸ்பரம் 16 கிமீ தொலைவிலான சுதந்திர இயக்க நடைமுறை முடிவுக்கு வரும். முக்கியமாக இந்தியாவுக்கு தொந்தரவாகும் இருதரப்பு ஊடுருவல்கள் ஒரு முடிவுக்கு வரும்.

மணிப்பூர் வன்முறை
மணிப்பூர் வன்முறை

ஆனால் மணிப்பூரின் மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவுக்கு, மணிப்பூர் பழங்குடியினங்களின் கூட்டு அமைப்பான ஐடிஎல்எஃப் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், இரு பிராந்திய பகுதிகளில் நடைமுறையில் உள்ள சுதந்திரமாக மக்கள் நடமாடும் அனுமதியை மத்திய அரசு தடை செய்வதையும் ஏற்க மறுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எல்லையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் 16 கி.மீ. வரை தடையின்றி மற்றைய பிராந்தியத்தில் விசா இல்லாமல் சென்று வர நடைமுறையில் இருக்கும் அனுமதி தொடர வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in