மணிப்பூர் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி...துணை ராணுவப் படைக்கு எதிராக திரும்பும் மாநில காவல்துறை!

மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்
மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள்
Updated on
1 min read

மணிப்பூர் விவகாரத்தில் அடுத்த அதிர்ச்சி நிகழ்வாக, துணைராணுவப் படையான அசாம் ரைபிள்ஸ் பட்டாலியனுக்கு எதிராக, மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெரும்பான்மை மெய்தி - சிறுபான்மை குக்கி என இருவேறு இனமக்களிடையேயான மோதலாக வெடித்த மணிப்பூர் கலவர சூழல், 3 மாதங்களை கடந்தும் தீர்வுக்கு வழியின்றி தொடர்ந்து வருகிறது. மேலும், இந்த மோதல் புதிய வடிவங்கள் எடுத்தும் வருகிறது. அவற்றில் ஒன்றாக அசாம் ரைபிள்ஸ் துணைராணுவப் படையினருக்கு எதிராக மாநில காவல்துறை வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது.

அசாம் ரைபிள்ஸ் என்பது பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் உருவாக்கப்பட்ட, தேசத்தின் மிகவும் பழமையான ராணுவப் படையாகும். 188 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகி, 1917-ல் அசாம் ரைபிள்ஸ் பெயர் பெற்ற இந்த துணை ராணுவப்படை, தேசத்தின் வடகிழக்கு எல்லையை குறிப்பாக, மியான்மருடனான எல்லைப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மணிப்பூர் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கே பணியமர்த்தப்பட்ட துணை ராணுவப்படையின் அங்கமாக, அசாம் ரைபிள்ஸ் பட்டாலியன்களும் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால், அசாம் ரைபிள்ஸ் படையினர் குக்கி இனத்தவருக்கு ஆதரவாக செயல்படுவதாக, மெய்தி இனத்தின் மணிப்பூர் பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அது போலவே, மெய்தி இனத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக மணிப்பூர் மாநில போலீஸார் மீது பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு.

அண்மையில் பிஷ்னுபூர் பகுதியில் மெய்தி இனத்தை சேர்ந்த தந்தை - மகன் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக, சந்தேகத்துக்கு ஆளான குக்கி இனத்தவரை தேடி அருகிலுள்ள சுராசந்த்பூரில் போலீஸார் குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் ரைபிள்ஸ் வீரர்கள், மாநில காவல்துறையினரை கடமையாற்ற அனுமதிக்காததோடு, திரும்பி போகவும் செய்ததாக கூறப்பட்டது.

இதன் அடிப்படையில், அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப்படையின் 9-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்களுக்கு எதிராக, காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் அசாம் ரைபிள்ஸ் தரப்பினர், ‘மத்தியப் பாதுகாப்பு படையின் பொறுப்பில் உள்ள பகுதி என்பதால், சுராசந்த்பூரில் பதற்றம் எழுவதை தடுக்கவே காவல்துறையினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்’ என விளக்கமளித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in