
மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் 3ம் தேதி இணைய சேவை முடக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு பிறகு பிராட்பேண்ட் இணைய சேவைக்கான தடையை அம்மாநில அரசு நீக்கியுள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இணைய சேவை தடையால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதாரத்துறையினரின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை தவிர்க்கும் வகையில் பிராட்பேண்ட் சேவைக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மொபைல் இணைய சேவைக்கான தடை நீக்கப்படவில்லை. முறையான அரசு அறிவிப்பு வரும் வரை, மொபைல் இணைய சேவைக்கு தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதனிடையே, இரண்டு பெண்களை ஆடையின்றி ஊர்வலமாக சிலர் இழுத்துச் சென்று மானபங்கம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19-ம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி இது குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என கூறி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.