மணிப்பூரில் இன்று முதற்கட்டத் தேர்தல்: 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

மணிப்பூரில் இன்று முதற்கட்டத் தேர்தல்: 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (பிப்.28) தொடங்கியிருக்கிறது. முதற்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் மார்ச் 5-ல் நடைபெறும்.

இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, விஷ்ணுபூர் ஆகிய பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள 29 தொகுதிகளிலும் மலைப்பகுதி மாவட்டங்களான காங்போக்பி, சூரசாந்த்பூர், பெர்ஸாவ்ல் ஆகியவற்றில் உள்ள தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹெய்ங்காங் தொகுதியில் போட்டியிடும் மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங், குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் பாஜக வெல்லும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளுடன், மேகாலயா ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியும் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிடுகிறது. நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் களத்தில் உள்ளன. முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 38 தொகுதிகளிலும் பாஜக தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. காங்கிரஸ் சார்பில், 25 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்திக் களம் காண்கிறது ஆளுங்கட்சியான பாஜக. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஸ்திரத்தன்மையின்மை, கிளர்ச்சி சம்பவங்கள், ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகள் நிலவியதாகவும், பாஜக ஆட்சியில் அமைதி, ஸ்திரத்தன்மை, சுமுகமான சூழல் என மணிப்பூர் மாறியிருப்பதாகவும் பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். 1960-கள் முதல் கிளர்ச்சி சம்பவங்கள் நடைபெற்றுவரும் மணிப்பூரில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் நிலைமை மோசமானது என பாஜக குற்றம்சாட்டிவருகிறது. 2002 முதல் 2015 வரை இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது, படுகொலைகள், போராட்டங்கள், கடையடைப்புகள் எனப் பதற்றமான சூழல் நிலவியதாகவும் பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.

மறுபுறம், இபோபி சிங்கின் அரசு நீண்டகாலம் மேற்கொண்டுவந்த முயற்சிகளின் காரணமாகவே மாநிலத்தில் அமைதியான சூழல் உருவாகியிருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக அதைத் தனது சாதனையாகச் சொல்லிக்கொள்வதாகவும் காங்கிரஸார் பதிலடி கொடுக்கின்றனர்.

அதேவேளையில், மணிப்பூரில் முன்பைக் காட்டிலும் நிலவரம் ஓரளவு மேம்பட்டிருக்கிறது எனச் சொன்னாலும், அதற்கு பாஜக ஆட்சிதான் காரணம் எனச் சொல்ல முடியாது என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். மனித உரிமை அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே இந்தச் சூழல் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

விலைவாசி உயர்வு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கருதப்படுகிறது. எல்லாவற்றையும் தாண்டி முக்கியப் பேசுபொருளாக இருப்பது ஆஃப்ஸ்பா சட்டம்தான்.

ஆஃப்ஸ்பா சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற முக்கியக் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக பாஜக அமைதி காக்கிறது. மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் யாரும் ஆஃப்ஸ்பா தொடர்பாக வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 26-ல் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது தவிர மணிப்பூர் தேர்தலையொட்டி வேறு எந்த வன்முறைச் சம்பவமும் நடக்கவில்லை. இன்றைய வாக்குப்பதிவும் அமைதியாகவே நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in