மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வழிபாடு: காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்!

மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் வழிபாடு: காரைக்கால் அம்மையார்  கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்!

காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் மாங்கனித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நகரம் முழுவதும் மாங்கனிகளை வாரி இறைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ம் தேதியன்று தொடங்கியது. அன்று மாலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் ஆற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து பரமதத்த செட்டியாரை அம்மையார் கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் (மாப்பிள்ளை அழைப்பு) வைபவத்துடன் விழா தொடங்கியது.

நேற்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு புனிதவதியார் தீர்த்தக்கரைக்கு வருதல், 7.30 மணிக்கு பரமதத்த செட்டியார் திருக்கல்யாண மண்டபத்துக்கு வருதல், தொடர்ந்து காலை 11 மணிக்கு திருக்கல்யாண வைபவம் ஆகியவை சிறப்பான வகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடு, இரவு 10 மணிக்கு பரமதத்தர் செட்டியாரும், புனிதவதியாரும் முத்துச் சிவிகையில் திருவீதியுலா நடைபெற்றது.

மிக முக்கிய திருவிழாவான மாங்கனி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. காலை 6.45 மணிக்கு பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாதமூர்த்தி விநாயகர் கோயில்) வருதல் நடைபெற்றது.

விழாவின் மிக முக்கிய நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு காலை 7 மணி அளவில் தொடங்கியது. காரைக்கால் வீதியெங்கும் உள்ள பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவை காண வந்திருந்தனர். அன்னதானம், குடிநீர் உள்ளிட்டவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் சந்திரபிரியங்கா உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை 6 மணிக்கு அம்மையார் எதிர் கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்வும், நாளை அதிகாலை 5 மணிக்கு இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளன.

விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தாலும், கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப் பெருமாள் வகையறா தேவஸ்தானத்தின் சார்பிலும் செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in