மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியானது

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு: என்ஐஏ முதல் தகவல் அறிக்கை வெளியானது

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் என்ஐஏவின் முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்ட குக்கர் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறைந்த வீரியம் கொண்ட ஐ.ஈ.டி குண்டு என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், வெடிகுண்டு விபத்தில் ஆட்டோ முழுவதும் சேதமடைந்தது. அத்துடன் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தமன் மற்றும் குக்கரை ஆட்டோவில் எடுத்துச் சென்ற ஷாரிக் (எ) பிரேம் ராஜ் ஆகியோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் கன்கனடி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்து 5 லிட்டர் பிரஷர் குக்கர், மூன்று 9 வோல்ட் பேட்டரி, மற்றும் ஐ.ஈ.டி குண்டு தயாரிக்க தேவையான மின்சாதனப் பொருட்களைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து மைசூரு பகுதியில் ஷாரிக் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டில் கன்கனடி போலீஸார் சோதனை நடத்தி ஐ.ஈ.டி குண்டு தயாரிக்க பயன்படுத்தும் சர்கியூட்கள், வேதியியல் பொருட்கள் உட்பட பல பொருட்களைக் கைப்பற்றினர்.

பின்னர் மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாத அமைப்புக்களுடன்தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இவ்வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டு கடந்த 23-ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏற்கெனவே அக். 23-ம் தேதி தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஷாரிக் (எ) பிரேம் ராஜ் தமிழகத்தில் கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் சுற்றித் திரிந்தது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும், இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்கும் அவருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற அடிப்படையில் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in