சமையல் எரிவாயு விலையையும் குறைக்க மேனகா காந்தி கோரிக்கை

பெட்ரோல், டீசல் வரிசையில் அடுத்த விலைக்குறைப்பு விக்கெட் சாத்தியமா?
சமையல் எரிவாயு விலையையும் குறைக்க மேனகா காந்தி கோரிக்கை

பெட்ரோல், டீசல் வரிசையில் சமையல் எரிவாயு விலையையும் குறைக்குமாறு, பாஜக எம்பி மேனகா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக எம்பி மேனகா காந்தி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான சுல்தான்பூரில் 4 நாள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் பேசும்போது, ‘பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பின் வழியில் சமையல் எரிவாயு விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.

மேனகா காந்தி
மேனகா காந்தி

தீபாவளி பரிசு என்ற பெயரில் மத்திய அரசு ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவித்தது. மேலும் வாட் வரிக் குறைப்பின் மூலம் மாநில அரசுகள் கூடுதலாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்குமாறு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில், பாஜக ஆளும் மாநிலங்கள் கூடுதல் விலைக்குறைப்பை மேற்கொண்டன. அடுத்தகட்டமாக, சமையல் எண்ணெய்க்கான விலையையும் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சமையல் எரிவாயுவான, எல்பிஜி சிலிண்டர் விலையும் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

எரிவாயு விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் இலவச திட்டமாக வழங்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை மக்கள், காயலான் கடையில் எடைக்குப் போடுவதாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதாரத்துடன் பிரச்சாரம் செய்து வருகிறது.

தற்போது, ஆளும் பாஜகவின் எம்பியான மேனகா காந்தியே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்குமாறு இன்று( நவ.6) கோரிக்கை விடுத்திருக்கிறார். இதனால், எரிவாயு விலைக் குறைப்பும் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கலாம். பாஜக அரசின் இந்த அறிவிப்புகள் ஓட்டாக மாறுகிறதோ இல்லையோ, கழுத்தை நெறிக்கும் விலைவாசி உயர்விலிருந்து தற்காலிகமாக மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in