சென்னைக்கு அருகில் ‘மேன்டூஸ் புயல்’; 6 மாவட்டங்களில் இரவில் பேருந்துகளை இயக்க தடை: தேர்வுகள் தள்ளிவைப்பு

சென்னைக்கு அருகில் ‘மேன்டூஸ் புயல்’; 6 மாவட்டங்களில் இரவில் பேருந்துகளை இயக்க தடை: தேர்வுகள் தள்ளிவைப்பு

‘மேன்டூஸ் புயல்’ நாளை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ள நிலையில், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இரவில் பேருந்துகளை இயக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. தற்போது நிலவரப்படி காரைக்காலுக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு தென்கிழக்கு மற்றும் சென்னைக்கு 510 கிமீ தென்கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே மாமல்லபுரம் அருகே நாளை இரவு கரையை கடக்கிறது. இந்தப் புயல் மணிக்கு தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதையடுத்து, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் இரவு நேர பேருந்துகளை இயக்கக்கூடாது என்றும் போக்குவரத்து மேலாண் இயக்குநர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

நாளை நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பூங்காக்கள் மூடல்

சென்னையில் மாநகராட்சி பூங்காக்கள், விளையாட்டு திடல்கள் நாளை முதல் மறு அறிவிப்பு வரை மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in