10 கிமீ வேகத்தில் நகரும் புயல்: 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

10 கிமீ வேகத்தில் நகரும் புயல்: 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை

மேன்டூஸ் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாவும் இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைக்கு கொண்டு இருந்த மேன்டூஸ் புயல் நேற்று மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் புயலாக வலு குறைந்து காரைக்காலுக்கு 180 கிலோமீட்டர் கிழக்கு- வட கிழக்கு மற்றும் சென்னைக்கு 260 கிலோமீட்டர் தென் கிழக்கு நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமுதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மேன்டூஸ் புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் சென்னையில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் புயல் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில், அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மேலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், கோவை, நீலகிரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்த 4 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடக்க உள்ள நிலையில் வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in