மின்  கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: காலக்கெடு அறிவிக்காததால் நுகர்வோர் அவதி

மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம்: காலக்கெடு அறிவிக்காததால் நுகர்வோர் அவதி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இணையதளத்தில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்பதால் மின் நுகர்வோர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணையவழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆனால், ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதனால் மின்வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும்போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மின் நுகர்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து மின்நுகர்வோர் கூறுகையில், " ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு அறிவிக்கப்படாத நிலையில், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்று நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல. மின் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு வழங்க வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மின் வாரிய அலுவலகத்துக்கு வந்து, எங்களது போர்ட்டல் மூலம் மின் கட்டணம் செலுத்தப்படும்போது இத்தகைய நிலை ஏற்படவில்லை. ஆனால், தனியாக இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும்போது, ஆதார் எண்ணை இணைத்தால்தான் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலை உள்ளதாக கூறுகின்றனர். அதற்கேற்ப இணையதள பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை’’ என்றனர்.

இதுதொடர்பாக இன்டர்நெட் மையத்தினரிடம் கேட்டபோது, ‘‘ஆதார் எண்ணை இணைக்காமல் மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. கட்டணம் செலுத்த முற்படும்போது, தானாகவே ஆதார் எண்ணை இணைப்பதற்கான லிங்க் வந்து விடுகிறது. எனவே, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடிகிறது. அதேவேளையில், செல்போனிலிருந்து யூபிஐ மூலம் பணம் செலுத்த முடிகிறது’’ என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in