திருமயம் அருகே மஞ்சுவிரட்டு: காளை முட்டி ஒருவர் பலி

திருமயம் அருகே  மஞ்சுவிரட்டு: காளை முட்டி ஒருவர் பலி

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நேற்று மாடுபிடி  வீரர் ஒருவரும்,  வேடிக்கை பார்த்த ஒருவரும் உயிரிழந்த  நிலையில் இன்றும் ஒருவர் மாடுமுட்டி  உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாட்டில் மதுரை பாலமேட்டில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி இருந்த அரவிந்த்ராஜன் என்ற வீரர் மாடு முட்டி உயிரிழந்தார். திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வேடிக்கை பார்க்க வந்திருந்த அரவிந்த் என்ற இளைஞரும் நேற்றைய தினம் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இருவர் குடும்பத்திற்கும் தமிழக அரசின் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருமயம் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  திருமயம் அருகே  அரிமளம் ராயவரத்தில் இன்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான காளைகளும், மாடுபிடி வீரர்களும் பங்கு பெற்றனர். 

இந்த நிலையில் மஞ்சுவிரட்டு போட்டியைப் பார்வையிட வந்திருந்த சிவகங்கை மாவட்டம் புதுவயலை சேர்ந்த கணேசன் (50) காளை முட்டியதில் படுகாயமடைந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

வீரவிளையாட்டு  போட்டியில் இன்று மூன்றாவது  உயிரும் பறிபோய் இருப்பது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in