கனியாமூர் கலவரத்தில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்: ஒரு மாதத்திற்குப் பின் கோர்ட்டில் சரண்

கனியாமூர் கலவரத்தில்  போலீஸாரால் தேடப்பட்டு வந்த இளைஞர்: ஒரு மாதத்திற்குப் பின் கோர்ட்டில் சரண்

கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது டிராக்டரால் பேருந்துகளை மோதி இடித்து நாசமாக்கியவர் சிறப்பு புலனாய்வு குழுவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்

கள்ளக்குறிச்சி அருகே கனியாமுரில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12- ம் வகுப்பு படித்த மாணவி, கடந்த மாதம் 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது சாவுக்கு நீதி கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டம் ஒரு கட்டத்தில் இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கைகளுக்கு மாறி கடந்த மாதம் 17-ம் தேதியன்று அது மிகப்பெரிய கலவரமாக வெடித்தது.

அந்தக் கலவரத்தின்போது கனியாமூர் பள்ளியின் பேருந்துகள், காவல்துறை வாகனம் உள்ளிட்டவை தீவைத்து எரிக்கப்பட்டன. பள்ளியின் ஆவணங்கள் உள்ளிட்ட உடைமைகள் எரித்து நாசமாக்கப்பட்டன. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுவரை 320 பேருக்கும் மேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கலவரத்தின்போது டிராக்டரை ஓட்டிய ஒரு இளைஞர் ஒருவர், வேகமாக வந்து பள்ளியின் பேருந்துகளை இடித்து நொறுக்கிய காட்சி பார்த்தவர்களின் மனதை பதை,பதைக்கச் செய்தது. அந்த நபரை இதுவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. அதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பள்ளிப் பேருந்தை டிராக்டரால் இடித்து சேதப்படுத்திய பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.

அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in