தாயம் விளையாட்டில் தோற்கடித்ததால் ஆத்திரம்: கத்திரிக்கோலால் குத்திக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை

தாயம் விளையாட்டில் தோற்கடித்ததால் ஆத்திரம்: கத்திரிக்கோலால் குத்திக்கொன்றவருக்கு ஆயுள்தண்டனை

தாய விளையாட்டில் தன்னைத் தோற்கடித்த நபரை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் தாயம் விளையாட்டில்  ஈடுபட்டிருந்தபோது ஆனந்தன் என்பவரை தனசேகர் என்பவர் தோற்கடித்துள்ளார். சில நாட்கள் கழித்து சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்தபோது இது குறித்து தகராறு ஏற்பட்டிருக்கிறது.  தனசேகரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய ஆனந்தன், தான் வைத்திருந்த கத்தரிக்கோலால் மார்பின் இடது பக்கத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த தனசேகர் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இந்த வழக்கு  சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு  சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எல். ஆப்ரஹாம் லிங்கன் முன்பு விசாரணை நடந்து வந்தது. காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் என்.ஜெய்சங்கர் ஆஜரானார். விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி,  ஆனந்தன் குற்றம் செய்திருப்பதை உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in