‘பாலியல் இன்பத்தை இழந்ததற்கு அரசு ரூ.10,000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’

பொய் புகாரால் வேதனையுற்றவர் தொடுத்த விநோத வழக்கு
‘பாலியல் இன்பத்தை இழந்ததற்கு அரசு ரூ.10,000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்’

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கந்திலால் என்பவர் அரசுக்கு எதிராக விநோத வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். அந்த வழக்கில் நஷ்ட ஈடாக ரூ.10,006.02 கோடி அரசு தனக்கு வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.

2020, ஜூலை 20 அன்று மானசா காவல்நிலையத்தில் கந்திலாலுக்கு எதிராக பெண் ஒருவர் புகாரளித்தார். அண்ணன் வீட்டில் சேர்ப்பதாக ஏமாற்றி பைக்கில் அழைத்துச் சென்ற கந்திலால், நண்பரான இன்னொரு நபருடன் சேர்ந்து தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினார். அந்த இரண்டாவது நபர் தன்னை மிரட்டி 6 மாதங்களுக்கு தொடர் பலாத்காரம் செய்ததாகவும் புகார் அளித்தார்.

இந்த புகாரின் கீழ் கந்திலாலை, 2020, டிசம்பர் 23 அன்று போலீஸார் கைது செய்தனர். அப்பாவியான கந்திலால், இந்த குற்றச்சாட்டுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியும் போலீஸார் செவிமெடுக்கவில்லை. பழங்குடி இனத்தை சேர்ந்த ஏழை என்பதால் அவருக்காக குரல் கொடுக்கவும் ஆளில்லை. சுமார் 2 வருடங்களுக்கு இழுத்தடித்த வழக்கில், கந்திலால் மீதான குற்றச்சாட்டை போலீஸார் நிரூபிக்காததில் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலையான கந்திலால் கடந்த 2 வருடங்களில் தான் இல்லாது தனது குடும்பம் பட்ட சிரமங்களை கேட்டறிந்தார். தாய், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வாழும் எளிய குடும்பத்தின் ஒரே உழைக்கும் நபர் என்பதால், கந்திலால் இன்றி அவரது குடும்பமே சாப்பாட்டுக்கு வழியின்றி சொல்லொண்ணா சிரமங்களில் தடுமாறி இருக்கிறது. இதனை அடுத்து வழக்கறிஞர் விஜய் சிங் யாதவ் என்பவரை சந்தித்து தனது வேதனை கதையை கூறினார் கந்திலால். இருவரும் கலந்து பேசியதில், வழக்கறிஞர் கட்டணமாக ரூ.2 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது. அதனை தனக்கு கிடைக்கும் நஷ்ட ஈடு தொகையில் கழித்துக்கொள்வதாகவும் ஒப்பந்தமிட்டுக் கொண்டார் கந்திலால்.

அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச அரசுக்கு எதிராக ரூ.10,006.02 கோடி நஷ்ட ஈடு கேட்டு கந்திலால் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், ரூ.6.02 கோடி மட்டுமே கந்திலால் கேட்கும் அர்த்தமுள்ள நஷ்ட ஈடு. வழக்கு கட்டணமாக ரூ.2 லட்சம் மற்றும் கந்திலால் குடும்பத்துக்கான நஷ்ட ஈடாக ரூ.6 கோடி ஆகியவற்றை உள்ளடக்கிய தொகை அது.

ஏனைய ரூ.10 ஆயிரம் கோடியும், ’மனித வாழ்க்கை விலை மதிப்பில்லாதது’ என்பதை உணர்த்தும் வகையில் மனுவில் சேர்த்துள்ளார் கந்திலால். தன் மீதான பொய்ப் புகார் காரணமாக ’2 வருடங்கள் தானும் தனது குடும்பத்தினரும் அனுபவித்த உடல், மனம், சமூகம் மற்றும் பொருளாதார இழப்புகளை ஈடுசெய்யும் தொகையாக’ பத்தாயிரம் கோடியை குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக இந்த 2 வருடங்களில் ’பாலியல் இன்பம் உட்பட இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பல்வேறு கொடைகளை தன்னால் அனுபவிக்க முடியாது போனது’ குறித்தும் முறையிட்டுள்ளார் கந்திலால். 35 வயதாகும் கந்திலால் தாக்கல் செய்திருக்கும் வழக்கு ஜன.10 அன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

மேலாக பார்க்கும்போது கந்திலாலின் கோரிக்கை வேடிக்கையாக தென்படக் கூடும். ஆனால், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, வருடக்கணக்கில் வழக்குகளுக்காக வாழ்க்கையை தொலைப்போரும் அவர் சார்ந்த குடும்பத்தினரும் அடையும் வேதனை மற்றும் இழப்புகளை நேர் செய்வதில் ரூ.10 ஆயிரம் கோடி என்பது சற்றுக் குறைவானதே. கந்திலாலும் தனது வேதனையை உலகுக்கு சொல்லவே, நடைமுறையில் சாத்தியமில்லாத பெருந்தொகையை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்பதாகவே தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in