மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு ஆண் பயணி தனது 21 மாத மகளின் டயப்பரில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது. கடத்தல் தங்கம், பேஸ்ட் வடிவில், டயப்பரின் உள்ளே பைகளில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், ஒரு ஆண் பயணி, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து, அதை தனது இடுப்பில் பெல்ட் போல கட்டியுள்ளார். மற்றொரு நபர் தனது மலக்குடலில் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்துள்ளார். இவையனைத்தும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மூன்று பயணிகளும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் 90.67 லட்சம் மதிப்புள்ள 1,606 கிராம் தங்கத்தை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.