‘யூடியூப் பாலியல் விளம்பரங்களால் படிப்பு கெட்டது; வேண்டும் ரூ.75 லட்சம் நஷ்டஈடு!’

உச்ச நீதிமன்றத்தை அதிரவைத்த மனுதாரர்
‘யூடியூப் பாலியல் விளம்பரங்களால் படிப்பு கெட்டது; வேண்டும் ரூ.75 லட்சம் நஷ்டஈடு!’

’யூடியூப் பாலியல் விளம்பரங்களில் கவனம் சிதறி தேர்வில் கோட்டை விட்டதால், ரூ.75 லட்சம் நஷ்டஈடாக கூகுள் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றொரு விசித்திர வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பொறுமையை சோதித்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், ஏ.எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த் கிஷோர் சௌத்ரி என்பவர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அந்த பொதுநல வழக்கை வாசித்த நீதிபதிகளுக்கு தூக்கிவாரிப் போட்டது. அப்படி அந்த மனுவில் மனுதாரர் என்ன முறையிட்டிருந்தார் தெரியுமா?

’நான் மத்திய பிரதேச காவல்துறையின் காவலர் பணிக்கான தேர்வுக்கு தயாராகி வந்தேன். அதற்கான தயாரிப்புகளில் ஒன்றாக அவ்வப்போது தேவையான யூடியூப் வீடியோக்களை பார்த்து குறிப்பெடுத்து வந்தேன். ஆனால், அந்த வீடியோக்களின் இடையே பாலியல் உணர்வைத் தூண்டும் விளம்பரங்கள் நிறைய தோன்றின. இதனால் கவனச் சிதறலுக்கு ஆளாகி, காவலர் பணியிடத் தேர்வில் தோற்றேன்.

நான் தேர்வில் தோற்றதற்கு யூடியூபில் தலைகாட்டிய பாலியல் விளம்பரங்களே காரணம். எனவே, இழந்த பணி வாய்ப்பை ஈடு செய்யும் வகையில், எனது கவனத்தை சிதறடித்த யூடியூப் நஷ்டஈடாக வழங்க வேண்டும். இந்த வகையில் ரூ.75 லட்சத்தை கூகுள் நிறுவனம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’. இவ்வாறாக தனது மனுவில் கோரியிருந்தார் சௌத்ரி.

இதனையடுத்து மனுதாரரை நீதிபதிகள் துளைத்தெடுத்தனர். ’கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றால் எதற்காக வீடியோக்களை பார்த்தீர்கள். இது முற்றிலும் விளம்பரத்துக்காக தொடுக்கப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்தவருக்கு அபராதம் விதிக்கிறோம்’ என்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்ததோடு, சௌத்ரிக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

ஆனால், தனக்கு வேலையில்லை என்றும், பெற்றோர் தினக்கூலிகள் என்றும் புலம்பிய சௌத்ரி, நீதிமன்றத்திடம் மன்னிப்பும் கேட்டார். இதனையடுத்து அபராதத் தொகையை ரூ.25 ஆயிரமாக குறைத்த நீதிபதிகள், ’எங்களால் மனுதாரரை மன்னிக்க முடியாது’ என கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும், பொறுப்பற்றவர்கள் தாக்கல் செய்யும் பொதுநல வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாவது குறித்து மறுபடியும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in