மதியம் ஜாமீனில் வந்தார்... மாலையில் படுகொலை செய்யப்பட்டார்: மதுரையில் கும்பல் வெறிச்செயல்

மதியம் ஜாமீனில் வந்தார்... மாலையில் படுகொலை செய்யப்பட்டார்: மதுரையில் கும்பல் வெறிச்செயல்

சோழவந்தான் அருகே காரில் வந்த மர்ம கும்பல், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் சக்திவேல் (37). இவர் மீது ஏற்கெனவே நான்கு கொலை வழக்குகள் உட்பட பல குற்ற வழக்குகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று மதியம் மதுரை மத்திய சிறையில் இருந்து சக்திவேல் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மாலை நேரத்தில் அவர் தனது உறவினரின் இரு சக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து மேலகால் வழியாக திருமங்கலத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல் சக்திவேல் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறிய கீழே விழுந்தார்.

தொடர்ந்து, காரில் வந்த மர்ம கும்பல் சக்திவேலை சரமாரியாக வெட்டி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் உயிரிழந்தார். இதையடுத்து, காரில் தப்பிச்சென்ற கொலைக்கும்பல், சக்திவேல் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். மேலும், சாலையோரத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

ஜாமீனில் வெளி வந்தவர் அன்றே கொலை செய்யப்பட்டதாலும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளதாலும், பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in