'ஒரு கிட்னியை காணோம்’: கல் அகற்றம் போர்வையில் சிறுநீரகத்தை களவாடியதாக மருத்துவமனை மீது புகார்

'ஒரு கிட்னியை காணோம்’: கல் அகற்றம் போர்வையில் சிறுநீரகத்தை களவாடியதாக மருத்துவமனை மீது புகார்
ARUNAVA

சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை கரைப்பதாக சொல்லிய மருத்துவமனையில், ஒரு பக்க சிறுநீரகத்தை களவு கொடுத்திருக்கிறார் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அப்பாவி ஒருவர்.

52 வயதாகும் சுரேஷ் சந்திரா ஊர்காவல் படை ஊழியராக பணியாற்றுகிறார். ஏப்ரல் மாத மத்தியில் வயிற்று வலி காரணமாக ஒரு தனியார் ஸ்கேன் மையத்தில் பரிசோதனை மேற்கொண்டார். சோதனையின் முடிவில் இடதுபுற சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாகவும், அவற்றை கரைக்க உதவுவதாகவும் கூறி ஸ்கேன் மைய உதவியாளர் ஒருவர் அலிகார் அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து விட்டார். உடனடியாக சுரேஷ் சந்திராவுக்கு மயக்க மருந்து அளித்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அடுத்த 3 தினங்கள் அதே மருத்துவமனையின் பராமரிப்பில் இருந்த சுரேஷ் சந்திரா தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய மருந்துகளுடன் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

சில வாரங்கள் சென்றதும் மீண்டும் அடிவயிற்று வலி ஆரம்பித்தது. இம்முறை வலி வித்தியாசமாக இருக்கவே, ஸ்கேன் மையத்தை நேரடியாக நாடாது வேறொரு மருத்துவரை நாடினார். அந்த மருத்துவர் சுரேஷ் சந்திராவின் அடிவயிற்றை அல்ட்ராசவுண்டு ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு ‘உங்கள் சிறு நீரங்களில் ஒன்றையே காணோம்’ என்று குண்டு வீசியிருக்கிறார். சிறுநீரக கல்லைக் கரைப்பதாக கூறிய மருத்துவமனையில் ஒரு பக்கசிறுநீரகத்தை இழந்திருப்பதை தாமதமாகவே சுரேஷ் சந்திரா உணர்ந்தார்.

இது தொடர்பாக தனது மேலதிகாரிகள் உதவியுடன் மேற்படி மருத்துவமனையில் விசாரிக்க செய்தார். அவர்கள் அப்படி சம்பவமோ, நபரோ எதிர்கொள்ளவில்லை என அடியோடு மறுத்திருக்கிறார்கள். தான் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை அரை மயக்கத்திலேயே வைக்கப்பட்டிருந்ததால் தன்னை கையாண்ட எவரையும் அடையாளம் தெரியவில்லை என்கிறார் சுரேஷ் சந்திரா.

கல் கரைப்பு அறுவை சிகிச்சை என்ற பெயரில் ஒரு சிறுநீரகத்தை களவாடிவிட்டார்கள் என்ற சுரேஷ் சந்திராவின் புலம்பல் அடுத்த கட்டத்துக்கு நகராது நிற்கிறது. அவருக்கான முழுமையான மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in