ஒரே ஒரு ஆர்டிஐ கேள்விக்கு 40 ஆயிரம் பக்கங்களில் பதில்... நிரம்பிய வாகனம்: நடந்தது என்ன?

திகைக்க வைத்த பதில்.
திகைக்க வைத்த பதில்.ஒரே ஒரு ஆர்டிஐ கேள்விக்கு 40 ஆயிரம் பக்கங்களில் பதில்... நிரம்பிய வாகனம்: நடந்தது என்ன?

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மனுவுக்கு, அளிக்கப்பட்ட 40,000 பக்க பதிலால் மனுதாரரின் வாகனம் முழுமையாக நிரம்பிய ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது.

கொரோனா தொற்றுநோய் காலத்தில் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் வாங்கியது தொடர்பான டெண்டர்கள் மற்றும் பில்கள் பற்றிய விவரங்களைக் கோரி இந்தூரின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம் தர்மேந்திர சுக்லா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவை சமர்ப்பித்தார்.

ஒரு மாதத்திற்குள் இந்த மனுவுக்குத் தகவல் வழங்கப்படாததால், அவர் மேல்முறையீட்டு அதிகாரியும், மாநில சுகாதாரத் துறையின் மண்டல இணை இயக்குநருமான மருத்துவர் ஷரத் குப்தாவை அணுகினார். மனுவை ஏற்றுக்கொண்ட அவர், சுக்லாவுக்கு இலவசமாக தகவல்களை வழங்குமாறு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த மனுவுக்கு 40 ஆயிரம் பக்கத்தில் பதிலளிக்கப்பட்டது. இந்த ஆவணங்களைத் கொண்டு வர சுக்லா தனது எஸ்யுவி காரை எடுத்துச் சென்றார். இந்த 40 ஆயிரம் பதில் பக்கங்களால் சுக்லாவின் வாகனம் முழுவதும் நிரம்பியது, ஓட்டுநர் இருக்கை மட்டுமே காலியாக இருந்தது.

பொதுவாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறும் பதிலுக்கு ஒரு பக்கத்திற்கு மனுதாரர் 2 ரூபாய் செலுத்தவேண்டும். ஆனால், இந்த மனுவுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்கப்படவில்லை, எனவே இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மனுதாரருக்கு சரியான நேரத்தில் தகவல் வழங்காமல் அரசு கருவூலத்திற்கு ரூ.80,000 இழப்பு ஏற்படுத்திய பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in