உதயநிதியின் நிகழ்ச்சிக்குக் கட்டப்பட்ட கொடி கம்பத்தை பிரித்த நபர் மின்சாரம் தாக்கி பலி: காரைக்குடியில் பரிதாபம்

உதயநிதியின் நிகழ்ச்சிக்குக் கட்டப்பட்ட கொடி கம்பத்தை பிரித்த நபர் மின்சாரம் தாக்கி பலி: காரைக்குடியில் பரிதாபம்

காரைக்குடியில் அமைச்சர் உதயநிதியின் வருகைக்கு கட்சி கொடி ஊன்றும் ஒப்பந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாபம் சம்பவம் நடந்துள்ளது. திமுக நிகழ்ச்சிக்காக சாலை ஓரங்களில் ஊன்றி வைத்த கட்சி கொடியை பிரிக்க முயற்சி செய்த தொழிலாளி ஏழுமலை மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காரைக்குடி வந்தார் .

முதல் நிகழ்ச்சியாக காரைக்குடியில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மைய கட்டிடப் பணியினை கண்ணதாசன் மணி மண்டபத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் அங்கு திறமையான மாணவ,மாணவியர்களுக்கு வேலைக்கான உத்தரவாதத்தையும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சமத்துவபுரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடந்த வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்திலும் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மது சுதன் ரெட்டி தலைமை ஏற்க தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

காரைக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்று பல இடங்களில் திமுக கொடி கம்பம் ஊன்றப்பட்டிருந்தது. கொடி ஊன்றும் பணிக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வந்திருந்த ஒப்பந்த தொழிலாளர் ஏழுமலை, விழா முடிந்த பின்பு கொடி கம்பத்தை அகற்றிய போது, மேலே சென்ற மின் வழித்தடத்தில் இரும்பால் ஆன கொடி கம்பம் பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொடி கம்பங்களை நடுவதற்கு விருதுநகர் மீனாட்சி சுந்தரம் என்பவர் குத்தகை எடுத்திருந்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வந்த போலீசார் ஏழுமலை உடலை கைப்பற்றினர். தொடர்ந்து காவல்துறையினர் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதுடன், உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு தகவலும் தெரிவித்தார்கள். இச்சம்பவம் காரைக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in