கடன் வாங்கித் தருவதாக ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி: 1.60 கோடி கள்ளநோட்டுகள், போலி நகைகள் பறிமுதல்

கடன் வாங்கித் தருவதாக ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி: 1.60 கோடி கள்ளநோட்டுகள், போலி நகைகள் பறிமுதல்

கடன் வாங்கித் தருவதாக நாளிதழில் விளம்பரம் தந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட பல்வேறு நபர்களிடம் மோசடி செய்த நபரை 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் போலி நகைகளுடன் தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை சேர்ந்த பிரபல அசைவ உணவகமான  பொன்னுசாமி ஓட்டலின் உரிமையாளர் தனது உணவகத் தொழிலை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக  நான்கு கோடி ரூபாய் கடன் பெறுவதற்காக முயற்சித்த அவருக்கு  தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக  ஹரஸ் ஆச்சார்யா என்கிற சுரேஷ்குமார் அறிமுகமாகியுள்ளார். அத்துடன் கடன் பெற்று தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்.

4 கோடி ரூபாய் கடனுக்கு  நான்கு லட்சம் ரூபாய்க்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்க வேண்டும் என்று கூறி பொன்னுசாமியிடம் இருந்து  நான்கு  லட்சத்தை பெற்றுக்கொண்ட சுரேஷ்குமார் அதன் பின் தலைமறைவாகிவிட்டார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொன்னுசாமி, காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து அடையாறு தனிப்படை போலீஸார் இதுகுறித்து  தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களின்  தேடுதலில் மோசடி நபர் சுரேஷ்குமார்  கோவையில்  பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீஸார்  அவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடம் 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளும், ஏராளமான போலி  நகைகளும் இருப்பதைக் கண்ட போலீஸார்  அவற்றையும் பறிமுதல் செய்தனர்.   அவரிடம் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது. போலீஸார் நடத்திய விசாரணையில், அதிக தொகையை சுலபமாக கடன் பெற்று தருவதாக நாளிதழ்களில் விளம்பரம் செய்து கடன் பெற வருபவர்களிடம் ஸ்டாம்ப் பேப்பர் வாங்குவதற்காக 10 சதவீதப் பணத்தை  முன்பணமாக பெற்றுக்கொண்டு  அவர் மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்மீது ஏற்கெனவே செம்மரக்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்  உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in