மின் மோட்டாருக்குள் இருந்த 1.8 கிலோ தங்கம்: அபுதாபியிலிருந்து சென்னை வந்தவர் சிக்கினார்

பறிமுதல் செய்யப்பட்ட தங்க உருளை
பறிமுதல் செய்யப்பட்ட தங்க உருளைமின் மோட்டாருக்குள் இருந்த 1.8 கிலோ தங்கம்: அபுதாபியிலிருந்து சென்னை வந்தவர் சிக்கினார்

அபுதாபியிலிருந்து மின்மோட்டாருக்குள் மறைத்து ரூ.95 லட்சம் மதிப்புள்ள தங்க உருளையைக் கடத்தி வந்த நபரைச் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அபுதாபியிலிருந்து சென்னைக்குத் தங்கம் கடத்தப்படுவதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அபுதாபியிலிருந்து சென்னை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி, சுற்றுலா விசாவில்  அபுதாபிக்குப்  போய்விட்டுத் திரும்பி வந்த நிலையில், அவர் மீது சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அவருடைய உடைமைகளை  முழுமையாகச்  சோதித்தனர். அதோடு அவரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளைக் கலைந்து சோதனை நடத்தினர். அந்த சோதனைகளில் எதுவும் சிக்கவில்லை.

ஆனாலும் சுங்க அதிகாரிகளுக்குச் சந்தேகம் தீரவில்லை. அவர் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்திருந்த, ஒவ்வொரு  பொருளையும் ஆய்வு செய்தனர். அப்போது மின் மோட்டார் ஒன்று வாங்கி வந்துள்ளார். அதிகாரிகள் அந்த மின்மோட்டாரை கழற்றி பார்த்து ஆய்வு செய்தனர். அந்த மின்மோட்டாருக்குள், தங்க உருளை ஒன்று மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர். 95 லட்சம் மதிப்புள்ள 1.8 கிலோ 24 கேரட்  தங்கம் கடத்தி வந்துள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in