
பள்ளிச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதானவர், வழக்கில் இருந்து தப்ப ஜாமீனில் வந்து அதே சிறுமியை திருமணம் செய்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நெடுமங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அல் அமீர்(23) . இவர் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து களியக்காவிளை போலீஸார் அல் அமீரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் இருந்து அண்மையில் ஜாமீனில் வெளியில் வந்தார் அல் அமீர். இந்நிலையில், இவ்வழக்கில் இருந்து தப்புவதற்காக அதே சிறுமியைத் திருமனம் செய்துகொள்ள முடிவு எடுத்தார்.
சிறுமிக்கு 18 வயது ஆகவில்லை. இருந்தும் அல் அமீர் அந்தச் சிறுமியின் பெற்றோரிடம் பேசித் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார். அல் அமீரும், சிறுமியின் பெற்றோரும் சேர்ந்து திருமண ஏற்பாடுகளைச் செய்து திருமணமும் முடிந்துவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதிவாசி ஒருவர் குழந்தைகள் நலக்குழும அதிகாரிக்குத் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து களியக்காவிளை போலீஸார் மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற அல் அமீர், சிறுமியின் பெற்றோர் ஆகிய மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.