
அண்ணன் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவினால் அண்ணனை கொலை செய்த தம்பியின் செயல் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையம் அருகே பாரதி நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று காலை 38 வயது மதிக்கத்தக்க நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீஸார் விரைந்து சென்று உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்து கிடந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் சவுத்ரி மகன் சஞ்சய் சவுத்ரி என்றும் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள மத்தம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இறந்து கிடந்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் உண்மையை கண்டறிய பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் இறந்து போன சஞ்சய் சௌவுத்ரியின் மனைவி சில காலங்களாக கணவரை பிரிந்து வாழ்வதும், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் சவுத்ரியின் சித்தப்பா மகனான முகேஷ் ஷானி (34) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
இந்த நிலையில் சஞ்சய் சவுத்ரி அவ்வப்போது சென்று தன் மனைவியை தன்னுடன் வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த முகேஷ் ஷானி தனது நண்பர் தேவா என்ற குபேந்திரன்(29) என்பவருடன் சேர்ந்து சஞ்சய் சவுத்ரியை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.
இதையடுத்து அவரை மதுபானக் கடைக்கு அழைத்துச்சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் சஞ்சய் சவுத்ரிக்கும் முகேஷ் ஷானிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சஞ்சய் சவுத்ரியை முகேஷ் ஷானி கடுமையாக தாக்கி கைலியால் சஞ்சய் சவுத்ரியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதற்கு தேவா உதவி செய்துள்ளார் என்பதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொலையாளிகள் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்த இருவரையும் துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளதற்கு மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.