4 கோடி கடனுக்காக 4 லட்சத்தை இழந்தார்; பிரபல ஓட்டல் அதிபரிடம் மோசடி: சிக்கியவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

4 கோடி கடனுக்காக 4 லட்சத்தை இழந்தார்; பிரபல ஓட்டல் அதிபரிடம் மோசடி: சிக்கியவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

பிரபல ஓட்டல் அதிபரிடம் 4 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை காட்டி மோசயில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை நீலாங்கரை, கபாலிஸ்வரர் நகர், 4-வது தெற்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(67). இவர் தமிழகம் உட்பட பல நாடுகளில் பொன்னுசாமி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். மேலும் இவர் தனது தொழிலை விரிவுப்படுத்த வேண்டி கோடிகணக்கில் பணம் தேவைப்பட்டதால் வங்கியில் கடன் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு நன்கு அறிமுகமான கிருஷ்ணகாந்த் என்பவர் மூலம் ஹரிஷ் ஆச்சாரியா என்ற சுரேஷ்குமார்(43) என்பவர் அறிமுகமானார். இதையடுத்து அவர் கடந்த 12-ம் தேதி அடையார், எல்.பி.சாலையில் உள்ள ஓட்டலுக்கு பொன்னுசாமியை வருமாறு கூறியதன் பேரில் பொன்னுசாமி ஓட்டல் அருகே வந்து காத்திருந்தார்.

அங்கு சொகுசு காரில் தங்க நகைகளை அணிந்து வந்த சுரேஷ்குமார் 4 கோடிக்கு கடன் வாங்கி தருவதாகவும் அதற்காக கடன் பத்திரம் எழுத ரூபாய் 4 லட்சத்திற்கு ஸ்டாம்ப் பேப்பர் வாங்க பணம் தரவேண்டும் என கூறினார். இதை உண்மை என நம்பி பொன்னுசாமி 4 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட சுரேஷ்குமார் அடையாறு, சர்தார் படேல் ரோட்டில் உள்ள கோகுல் ஆர்.கே கட்டிடத்துக்குள் பொன்னுசாமியை அழைத்து சென்று இங்கேயே இருக்கும்படி கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் சுரேஷ்குமார் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ஓட்டல் அதிபர் பொன்னுசாமி இது குறித்து கடந்த 21-ம் தேதி அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து சுரேஷ்குமார் பயன்படுத்திய காரின் எண்ணை கண்டுபிடித்தனர்.

பின்னர் கார் எண்ணை வைத்து அவருடைய விலாசத்தை கண்டுபிடித்தனர். இதனையடுத்து தனிப்படை போலீஸார் சுரேஷ்குமாரின் சொந்த ஊரான கோவை மாவட்டம், ரத்தினபுரிக்கு சென்று அவரை கைது செய்ததுடன் அவர் பயன்படுத்திய கார் மற்றும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகள், போலி தங்க நகைகள், 16 செல்போன்கள், ஒரு லேப்டாப் மற்றும் சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் நிலையம் அழத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சுரேஷ்குமார் பிரபல செய்தித்தாளில் கடன் ஏற்பாடு செய்து தருவதாக விளம்பரம் கொடுத்ததாகவும், அதை பார்த்த கிருஷ்ணகாந்த் என்பவர் தன்னை அணுகி மேற்படி ஓட்டல் அதிபர் பொன்னுசாமி என்பவருக்கு கடன் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் தான் அவரை சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டு ஊருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுபோல் பல பேரிடம் கடன் வாங்கி தருவதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகள் விளையாட பயன்படுத்தும் போலி ரூபாய் நோட்டுகளை பெட்டியில் அடுக்கி வைத்து அதன் மேல் பகுதியில் சில ஒரிஜினல் நோட்டுகளை வைத்து கடன் கேட்டு வருபவர்களிடம் இதனை காண்பித்து ஏமாற்றியதும், கடன் கேட்டு வருபவர்கள் தன்னை நம்பவேண்டும் என்பதற்காக கவரிங் நகைகளை அணிந்து கொண்டு சொகுசு காரில் வலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in