மகனுக்கு வரன் தேடிய தந்தை; பெண் குரலில் பேசிய மோசடி மன்னன்: 21 லட்சத்தை இழந்த சென்னை இளைஞர்

பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்ட கல்யாணராமன்
பெண் குரலில் பேசி மோசடியில் ஈடுபட்ட கல்யாணராமன்

திருமணம் செய்வதாக கூறி இளைஞரிடம் பெண் குரலில் பேசி 21 லட்சத்தை மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரகுராம்(33). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் வரன் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு ரகுராமின் தந்தை பாலசுப்பிரமணியன் செல்போனிற்கு ஒரு வரன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. பின்னர் பாலசுப்பிரமணியன் மீண்டும் அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பேசிய நபர், எனது பெயர் கல்யாண ராமன் என்றும் தன்னுடைய அண்ணன் மகள் ஐஸ்வர்யாவுக்கு மாப்பிள்ளை தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாலசுப்பிரமணியன் தன்னுடைய மகனின் விவரங்களை பெண் வீட்டாருக்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பாலசுப்பிரமணியனை தொடர்பு கொண்ட கல்யாணராமன், உங்கள் மகன் ரகுராமை வீட்டில் அனைவருக்கும் பிடித்துள்ளது என்றும் விரைவில் திருமண நிச்சயம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து ரகுராம்- ஐஸ்வர்யா இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்தனர். இந்த நிலையில் திடீரென ஒரு நாள் ஐஸ்வர்யா, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி ரகுராமிடம் மருத்துவ செலவிற்கு பணம் கேட்டுள்ளார். இதை நம்பி ரகுராம் முதலில் ஜிபே மூலம் 8 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்கு பணம் வேண்டுமென கூறி ஐஸ்வர்யா சிறுக சிறுக ரகுராமிடம் இருந்து சுமார் 21 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் ரகுராம், ஐஸ்வர்யாவிடம் திருமணம் ஏற்பாடுகள் குறித்து கேட்டுள்ளார். அப்போது, கல்யாணராமனும் ஐஸ்வர்யாவும் ஏதாவது காரணம் கூறி தட்டிக் கழித்து வந்துள்ளனர். மேலும் திருமணம் செய்ய மறுத்ததால் ரகுராம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க பணத்தை திரும்ப தர முடியாது என கல்யாணராமனும், ஐஸ்வர்யாவும் தெரிவித்துள்ளனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ரகுராம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சேலத்தைச் சேர்ந்த தாத்தாத்ரி (49) என்பவர் கல்யாணராமன் மற்றும் ஐஸ்வர்யா என்ற பெயரில் பேசியது தெரியவந்தது. மேலும் தாத்தாத்ரி ஐஸ்வர்யா போல் பெண் குரலில் பேசி ரகுராமிடம் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்த்து. இதனையடுத்து திருமணம் செய்வதாக கூறி பெண் குரலில் பேசி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தத்தாத்ரியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு வரன் தேடும் முதியவர்களை குறிவைத்து இதுபோன்று மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in