நெருக்கடி தரும் பாஜக: நெருக்கம் காட்டத் தொடங்குகின்றனவா காங்கிரஸும் திரிணமூலும்?

நெருக்கடி தரும் பாஜக: நெருக்கம் காட்டத் தொடங்குகின்றனவா காங்கிரஸும் திரிணமூலும்?

மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் அவர், ஆகஸ்ட் 7-ல் நடக்கவிருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைமையிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்துவாரா எனும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது, மேற்கு வங்கத்தின் ஹவுராவில் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கைது என பரபரப்பாகியிருக்கும் இன்றைய சூழலில், முரண்பாடுகளைக் களைந்து இரு கட்சிகளும் இணக்கமாகத் தொடங்கியிருக்கின்றனவா எனும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஆசிரியர்கள் பணி நியமன முறைகேடு தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீடு மற்றும் அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஜூலை 22-ல் சோதனை நடத்திய அமலாக்கத் துறை பின்னர் இருவரையும் கைதுசெய்தது. இருவரின் வீடுகளிலிருந்தும் 49 கோடி ரூபாயும், 6 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்ட நிலையில், அமைச்சர் பதவியிலிருந்தும் கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கினார் மம்தா பானர்ஜி. எனினும், இவ்விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து எழும் குற்றச்சாட்டுகள் மம்தா பானர்ஜி அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கின்றன.

குறிப்பாக, மம்தா பானர்ஜியின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பார்த்தா சாட்டர்ஜி மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு அவரை தார்மிக ரீதியாக மிகவும் பாதித்திருக்கிறது. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் மம்தா நடத்திய போராட்டங்களில் துணை நின்றவர் பார்த்தா சாட்டர்ஜி.

இதற்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுடனான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தின் ஹவுராவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களான இர்ஃபான் அன்சாரி, ராஜேஷ் கச்சப், நமன் பிக்ஸால் கொங்காரி ஆகிய மூவரின் கார்களிலிருந்து 49 லட்சம் ரூபாய் சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது. அவர்களையும் அவர்களுடன் வந்த மேலும் இருவரையும் மேற்கு வங்க போலீஸார் கைதுசெய்தனர்.

பாஜக உதவியுடன் ஜார்க்கண்ட் கூட்டணி அரசைக் கவிழ்க்க இந்த மூவரும் திட்டமிட்டதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. ஜார்க்கண்டில் பாஜக அரசு அமைய உதவினால் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்குத் தலா 10 கோடி ரூபாய் வழங்குவதாக மூவரும் உறுதியளித்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ குமார் ஜெயம்ங்கல் போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரத்தை வைத்து பாஜகவுக்குப் பதிலடி தர திரிணமூல் காங்கிரஸ் திட்டமிடுகிறது.

கூடவே, குஜராத் மாநில அமைச்சர் அர்ஜுன் சிங் சவுஹான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பவும் திரிணமூல் முனைப்பு காட்டுகிறது.

இந்தச் சூழலில், மம்தாவின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. எனினும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையோ, அக்கட்சியின் பிற முக்கியத் தலைவர்களையோ அவர் சந்திப்பாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. எனினும், தொடர்ந்து பாஜகவின் தரப்பிலிருந்து அதிகரித்துவரும் அழுத்தம், இரு கட்சிகளையும் ஒரே புள்ளியை நோக்கி நகர்த்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in