மம்தாவின் டெல்லி பயணம்... என்னவோ திட்டம் இருக்கு!

மம்தாவின் டெல்லி பயணம்... என்னவோ திட்டம் இருக்கு!

நாளை (நவ. 22) டெல்லி செல்லவிருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசவிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது. வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றிருக்கும் சூழலில், நவ.29-ல் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குவதால், மம்தாவின் டெல்லி பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தக் கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்கள் முறைப்படி திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். எனினும், ஓராண்டாக விவசாயிகளின் போராட்டம் தொடர்வதற்கு இவ்விஷயத்தில் முடிவெடுக்க மத்திய அரசு தாமதித்ததுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்களை மம்தா சந்திப்பது, எதிர்க்கட்சிகளின் வேகத்தை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து விவசாயிகளுக்கு வாழ்த்து சொன்ன மம்தா, விவசாயிகள் மீது வன்மம் காட்டப்பட்டதாக பாஜகவைக் கடுமையாகச் சாடினார். இதற்கிடையே, டெல்லியில் பிரதமர் மோடியையும் சந்திக்கவிருக்கும் மம்தா பானர்ஜி, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் அமைந்திருக்கும் பஞ்சாப், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) அதிகாரம் விரிவுபடுத்தப்பட்டிருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவரிடம் பேசவிருக்கிறார். நவ.25-ம் தேதி டெல்லியில் தங்க திட்டமிட்டிருக்கும் மம்தா, மேற்கு வங்க மாநிலத்தின் தேவைகள் குறித்து மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்.

ஜூலை மாதம் டெல்லிக்குச் சென்றிருந்தபோது, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்த மம்தா, ஆகஸ்ட் மாதம் நடந்த காணொலிச் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட தலைவர்களிடம் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2024 மக்களவைத் தேர்தலுக்கான அணிதிரட்டல்களை, முன்கூட்டியே தொடங்குவதில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பாஜக சார்பில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்பது தீர்மானிக்கப்பட்ட விஷயம். ஆனால், எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் என யாரும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. முதலில், எந்தெந்தக் கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்குச் சவால் விடுக்கும் என்பதும் இறுதியாகவில்லை. இந்நிலையில், மம்தாவைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த பிற கட்சிகள் முன்வருமா என்பது சந்தேகம். எனினும், பிரதமர் வேட்பாளரைத் தேர்வுசெய்வதெல்லாம் அப்புறம். முதலில், பாஜகவுக்கு எதிராக அணிதிரள்வதுதான் முக்கியம் என மம்தா கருதுகிறார். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் பலனை, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் அறுவடை செய்ய பாஜக தயாராகும் நிலையில், எதிர்க்கட்சிகளும் அதையே ஆயுதமாகப் பயன்படுத்தத் திட்டமிடுகின்றன. இந்நிலையில், மம்தாவின் டெல்லி விஜயம் அடுத்த பூகம்பத்துக்கான ஆரம்பப் புள்ளியாக இருக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in