பெகாசஸ் விவகாரம்: 5 செல்போன்களில் ‘மால்வேர்’!

உச்ச நீதிமன்றத்தில் நிபுணர் குழு தகவல்
பெகாசஸ் விவகாரம்: 5 செல்போன்களில் ‘மால்வேர்’!

பெகாசஸ் வேவு மென்பொருள் விவகாரம் குறித்து விசாரணை நடத்தியிருக்கும் நிபுணர் குழு, தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்திருக்கிறது. இதில் பல முக்கியத் தகவல்கள் வெளிவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ் வேவு மென்பொருள் மூலம், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதி என ஏறத்தாழ 300 இந்தியர்களின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல்கள் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது.

இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்திடம், இதுகுறித்து ஆராய அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறியது. அதன் பின்னர் காத்திரமான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதையடுத்து, 2021 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றமே தானாக ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

இந்தக் குழுவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆலோக் ஜோஷி, தொழில்நுட்ப நிபுணர் சந்தீப் ஓபராய் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தொழில்நுட்ப ரீதியாக உதவ, டாக்டர் நவீன் குமார் சவுத்ரி, டாக்டர் பிரபாகரன், டாக்டர் அஸ்வின் அனில் குமாஸ்தே ஆகியோரும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் குழு தனது இடைக்கால அறிக்கையை, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தது. பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் உட்பட பலரது செல்போன்களைப் பெற்று அதில் தடயவியல் பரிசோதனையை இக்குழு நடத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பெகாசஸ் குறித்து புகார் எழுப்பிய செயற்பாட்டாளர்களில் பலர் பரிசோதனைக்காக இக்குழுவிடம் தங்கள் செல்போன்களை வழங்கவில்லை என்று குழுவினர் அதிருப்தியடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இக்குழு தனது அறிக்கையை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்திடம் இக்குழு தெரிவித்திருக்கிறது.

இதையடுத்து “இவ்விவகாரத்தில் இங்கு (உச்ச நீதிமன்றம்) எடுத்த நிலைப்பாட்டைத்தான் அங்கும் (நிபுணர் குழு விசாரணை) எடுத்திருக்கிறீர்கள்” என மத்திய அரசு வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டிப்புடன் கூறினார்.

இந்தக் குழு 29 செல்போன்களை ஆய்வுசெய்தது. அவற்றில் 5 செல்போன்களில் ‘மால்வேர்’ இருப்பது தெரியவந்திருப்பதாக, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அது பெகாசஸ் வேவு மென்பொருள்தானா என்பது இன்னமும் உறுதிசெய்யப்படவில்லை.

குடிமக்களின் பாதுகாப்பு, எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆலோசனைகள் இக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கின்றன. “இது ஒரு மிகப்பெரிய அறிக்கை. இதிலிருந்து எந்தெந்த பகுதிகளை வெளியிடலாம் என்று பார்க்கலாம்” என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, இணையதளத்தில் இந்த அறிக்கையை வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாகவும் கூறினார். இந்த ஆய்வுக்காகத் தங்கள் செல்போன்களைக் கொடுத்த சிலர், ரவீந்திரன் குழுவின் அறிக்கையைப் பொதுவெளியில் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த அறிக்கையின் திருத்தப்பட்ட வடிவம் வெளியிடப்பட வேண்டும் என்றும், தங்கள் செல்போன்களில் எந்தவிதமான மால்வேர் இருந்தது எனத் தெரிந்துகொள்வது மனுதாரர்களின் உரிமை என்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். மனுதாரரின் சார்பில் வாதிடும் இன்னொரு வழக்கறிஞரான விருந்தா குரோவரும் இதே கோரிக்கையை முன்வைத்தார்.

4 வாரங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in