`சட்டவிரோதமாக செயல்படும் 66 பார்கள்; கோடிக்கணக்கில் முறைகேடு'- முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பகீர்

`சட்டவிரோதமாக செயல்படும் 66 பார்கள்; கோடிக்கணக்கில் முறைகேடு'- முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் பகீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் டாஸ்மாக் பார் நடத்துவதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடப்பதாகவும், இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏவுமான தளவாய் சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.

தளவாய் சுந்தரம்
தளவாய் சுந்தரம்

இதுகுறித்து தளவாய் சுந்தரம் காமதேனு இணையத்திடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் மதுபானங்கள் விற்பனை செய்ய 112 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மார்க் கடையின் அருகில் மது அருந்துவதற்கு இக்கடைகளில் பார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜுலை 2021-ல் 112 கடைகளுக்குரிய பார்கள் ஏலம் விடப்பட்டதில் 55 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டது. ஏலம் எடுக்கப்பட்ட 55 கடைகளில் 25 கடைகளுக்கு மட்டுமே அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகையினை ஏலதாரர்கள் கட்டியுள்ளனர். மீதமுள்ள 30 பார்களுக்கு ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையினை கட்டவில்லை.

ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையினை கட்டவில்லை என்றால் டாஸ்மார்க் பார் நடத்த முடியாது. இந்நிலையில் ஏலம் விடப்பட்டு பணம் செலுத்தாத 30 பார்களும், ஏலத்திற்கு போகாத 57 பார்களும், ஆக மொத்தம் 87 பார்களில் 10 பார்களுக்கு இடவசதி இல்லாததால் ஏலம் விடப்படவில்லை. மீதமுள்ள 77 பார்களுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. இதில் 11 கடைகளுக்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டு அரசுக்கு செலுத்த வேண்டிய ஏலத்தொகை ஏலதாரர்களால் செலுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள ஏலம் எடுக்கப்படாத 66 பார்களில் சட்டத்திற்கு விரோதமாக முறைகேடாக பார் செயல்பட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் அரசுக்கு வர வேண்டிய 66 பார்களுக்கான வருவாய் தொகை கிடைக்காமல் அரசுக்கு மாதம் ஒன்றுக்கு பலகோடி ரூபாய் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. அரசியலில் உள்ள சிலரின் அதிகார தூண்டுதலால் சட்டத்திற்கு புறம்பாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் செய்து, தனிநபர்கள் அதனைப் பெற்று பயனடைந்து வருகிறார்கள். இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு தவறு இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in