
தெருச் சண்டையில் கைதானவருக்கு சிறை தண்டனையை தவிர்க்கும் வகையில், ’நாள்தோறும் 5 முறை நமாஸ் செய்ய வேண்டும்’ என்று மாகாராஷ்டிர மாநில மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
நாசிக் மாவட்டத்தின் மலேகான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடந்தது. உமர் கான் ஒரு ஆட்டோ ஓட்டுநர். சம்பவத்தன்று மலேகான் நகரின் குறுகிய பாதையில் விரைந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த பைக் ஒன்றின் மீது உமர் கான் ஆட்டோ மோதியது. பைக் உரிமையாளர் இது தொடர்பாக நியாயம் கேட்டபோது, வாக்குவாதம் அதிகரித்து உமர் கான் அவர் மீது கை நீட்டினார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகி, நீதிமன்றப் படிகளில் ஆண்டுக்கணக்கில் ஏறி இறங்கி வந்தது.
சம்பவம் நடந்த 2010க்குப் பின்னர் இத்தனை ஆண்டுகளாக தொடரும் வழக்கு, தற்போதைய மாஜிஸ்திரேட் நீதிபதி தேஜ்வந்த் சந்து முன்பாக வந்தது. வழக்கினை முடித்து வைக்க நீதிபதி விரும்பினார். ஆனால் உமர் கான் மீது பதிவான குற்றப் பிரிவுகள் அவருக்கான சிறைத் தண்டனையை கோரின. எனினும், நீதிபதியின் அதிகார வரம்புக்குட்பட்டு இதில் முடிவெடுக்க சட்டம் அனுமதித்ததால், வித்தியாசமான தீர்ப்புக்கு நீதிபதி இறங்கி வந்தார்.
அதன்படி, இனி இதுபோன்ற வரம்பு மீறல்களில் ஈடுபடக்கூடாது என்ற நீதிமன்றத்தின் எச்சரிக்கையுடன் உமர் கானை விடுவிக்க முடிவு செய்தார். ஆனால், நீதித்துறையில் அது மோசமான உதாரணமாக மாறலாம் என்பதால், கூடுதலாக சில ‘தண்டனைகளை’யும் அறிவித்தார்.
அதன்படி அருகிலிருக்கும் ’சோனாப்புரா மசூதி வளாகத்தில், 2 மரக் கன்றுகளை நட்டு அவை மரமாகும் வரை உமர் கான் பேணிக் காக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றும் உமர் கான் கடந்த சில காலமாக முறையான தொழுகை மேற்கொள்வதில்லை என்பதை கேட்டறிந்தவராக, ‘அடுத்து வரும் 21 நாட்களுக்கும் தினமும் 5 முறை நமாஸ் செய்ய வேண்டும்’ என்றும் உத்தரவிட்டார்.