கடற்பசு இறந்து கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம் அருகே தொடரும் விபரீதம்
கடற்பசு இறந்து கரை ஒதுங்கியது

ராமேஸ்வரம் அருகே அரிய வகை கடற்பசு இன்று காலை இறந்தநிலையில் கரை ஒதுங்கியது. கடற்பசு உள்ளிட்ட அரிய கடல்வாழினங்கள் இறந்து கரையொதுங்குவது தொடர்பாக இந்திய வன உயிரின நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

மன்னார் வளைகுடா, பாக் ஜல சந்தி ஆகிய 2 கடற்பகுதிகளை உள்ளடக்கி ராமநாதபுரம் மாவட்டம், தமிழகத்தின் நீண்ட கடல் எல்லை மாவட்டமாக உள்ளது. இதில், மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கடற்குதிரை, கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை பவளப்பாறைகள், மெல்லுடலிகள் உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இப்பகுதி மத்திய சுற்றுச்சூழல் வன அமைச்சகத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்கள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையின் கீழ் வேட்டை தடுப்பு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடுவோருக்கு 7 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களின் சொர்க்க பூமியான இங்கு, மீனவர் வலையில் சிக்கும் கடற்பசுக்கள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு அப்பால், பாறைகளில் மோதி காயமடைந்த கடற்பசுக்கள் இறந்த கரை ஒதுங்கியும் வருகின்றன.

இந்நிலையில் ராமேஸ்வரம் அருகே வில்லூண்டி தீர்த்தம் பகுதியில் அரிய வகை கடற்பசு இன்று(டிச.19) காலை கரை ஒதுங்கியது. இது குறித்து தகவலறிந்த மண்டபம் வனத்துறையினர் அங்கு விரைந்தனர். எட்டு வயது நிரம்பிய , சுமார் 250 கிலோ எடை கொண்ட ஆண் கடற்பசுவை மீட்டனர். கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்கு பின் மிகவும் சுகாதாரமான முறையில் அந்த இடத்திலேயே புதைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டில் மட்டும் புதுமடம், மண்டபம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய கடற்பகுதியில் தலா ஒரு ஆண், பாம்பன் சின்னப்பாலம் கடற்பகுதியில் ஒரு பெண் என 4 கடற்பசுக்கள் பாறைகளில் மோதி காயமடைந்து இறந்து கரை ஒதுங்கியுள்ளது. ஆழ்கடலில் வசித்து வரும் கடற்பசுக்கள் உற்சாக மிகுதியில் துள்ளி குதித்து உடல் மேலெழும்பும்போது பலத்த காற்றின் வேகத்தில் தள்ளப்பட்டு பாறைகளில் மோதுகின்றன. அவற்றில் படுகாயமடைந்து இறப்பவை, அழுகிய நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இது தொடர்பாக இந்திய வன உயிரின நிறுவனம் மற்றும் கால்நடை பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in