‘எல்லை உரிமையில் ஓர் அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம்’

கர்நாடகத்துக்கு எதிராக மராட்டிய சட்டப்பேரவை தீர்மானம்
‘எல்லை உரிமையில் ஓர் அங்குலம் கூட விட்டுத்தர மாட்டோம்’

மராட்டிய மொழி பேசும் கர்நாடக எல்லை நகரங்கள் மற்றும் கிராமங்களில் தங்களது உரிமையை வலியுறுத்தும் விதமாக, புதிய தீர்மானம் ஒன்றை மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று ஒருமனதாக நிறைவேற்றியது.

கர்நாடக - மராட்டிய மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினையின் அடுத்த கட்டமாக, இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

அண்டை தேசங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதில் மட்டுமல்ல, மாநிலங்களுக்கு இடையேயும் இந்தியாவுக்கான எல்லைப் பிரச்சினைகள் நீடிக்கின்றன. கர்நாடக - மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இடையே 20 ஆண்டுகளாக தொடரும் இந்த விவகாரம், தற்போதைய பாஜக ஆட்சி காலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்தியில் மட்டுமன்றி, பிரச்சினைக்கு ஆளான 2 மாநிலங்களிலும் பாஜகவே ஆள்வது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலத்தை நேரடியாக பாஜக ஆள்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கூட்டணியில், துணை முதல்வர் பொறுப்புடன் பாஜக ஆட்சி செய்கிறது. 2 பாஜக மாநிலங்களும் பரஸ்பரம் எல்லை கிராமங்களை குறிவைத்து, அடுத்த மாநிலத்தின் பிராந்தியங்களில் உரிமை கோருகின்றன. இவை தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கு வரை இரு மாநிலங்களுக்கும் இடையிலான எல்லை தாவா இழுபறியில் உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இரு மாநில முதல்வர்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இரு மாநில முதல்வர்கள்

இந்த பிரச்சினையை முன்வைத்து, அண்மையில் இரு மாநில முதல்வர்கள் இடையிலான வார்த்தைகள் பரிமாற்றமும் வரம்பு கடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் சமாதான ஏற்பாடுகள் தொடங்கின. ஆனபோதும் இந்த பிரச்சினை அதிகாரபூர்வமாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. அதன்படி, எல்லைப் பிரச்சினையில் கர்நாடாக மாநிலம் தனது உரிமையை வலியுறுத்தும் வகையில் கடந்த வியாழன்று சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியது.

இதற்கு பதிலடியாக, இன்றைய தினம்(டிச.27) மராட்டிய சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில், ’கர்நாடக எல்லைக்கு உட்பட்ட மராத்தி பேசும் பெல்காம் உள்ளிட்ட 5 முக்கிய நகரங்கள் மற்றும் 865 கிராமங்களின் ஒவ்வொரு இஞ்ச் நிலப்பரப்பும், மகாராஷ்டிராவின் உரிமைக்கு உரியது’ என அறிவித்துள்ளார்கள். மேலும் கர்நாடகாவின் மராத்தி பேசும் மக்களின் பாதுகாப்பை, அந்த மாநில அரசு உறுதி செய்ய, மத்திய அரசு உத்தரவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முன்னாள் முதல்வரும் பிளவுறாத சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே, ’கர்நாடகம் ’ஆக்கிரமித்துள்ள’ மகாராஷ்டிர பிராந்தியங்களை தனி யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்’ என்று அதிரடி காட்டியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in