
மகாராஷ்டிரா மாநிலத்தில் 6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை எடுத்துக்கொண்ட உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அரசு குற்றம் சாட்டியது. இதையடுத்து மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் அந்த மருந்து உற்பத்தி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு கலப்படம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இது தொடர்பாக அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் மூன்று பேரை நொய்டா போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 6 இருமல் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை அம்மாநில அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. தங்கள் மாநிலத்தில் இயங்கி வரும் இருமல் மருந்து உற்பத்தி செய்து வரும் 108 உற்பத்தி நிறுவனங்களில் சுமார் 84 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும். அதில் ஆறு நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும். நான்கு நிறுவனங்களின் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதாக அம்மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட்,தெரிவித்துள்ளார். அத்துடன் விதிகளை மீறியதற்காக 17 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.