‘எங்கள் துயரம் உங்களுக்கு வணிகமா?’ - எதிர்ப்பைச் சந்திக்கும் விவேக் அக்னிஹோத்ரி

இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி

1991-ல் நிகழ்ந்த காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவேக் அக்னிஹோத்ரி, அடுத்து ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ எனும் திரைப்படத்தை இயக்குவதாக ஐஎம்டிபி இணையதளம் தெரிவித்திருந்தது. அவரும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

1984-ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் என அதன் போஸ்டர் உணர்த்துகிறது. இந்நிலையில், சீக்கிய அமைப்பு இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

மகாராஷ்டிர சீக்கியர் சங்கம் எனும் அந்த அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீக்கியர் கலவரம் போன்ற மனிதகுல வரலாற்றின் துரதிருஷ்டவசமான துயரமான அத்தியாயங்களை, படைப்புச் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட லாபத்துக்காகச் சுரண்டுவதையும் வணிகமயமாக்குவதையும் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தில் நிலவும் அமைதியைக் குலைப்பதைத் திரைத் துறையினர் கைவிட வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

சமூகம், கலாச்சாரம், கல்வி, விளையாட்டு மற்றும் மத ரீதியான செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அந்த அமைப்பு, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் உருவான சர்ச்சைகள், மிகைப்படுத்தல்கள் ஆகியவற்றால் துணிச்சலடைந்திருக்கும் விவேக் அக்னிஹோத்ரி, சீக்கியர்கள் எதிர்கொண்ட துயரங்களை வணிகமயமாக்க முயற்சிக்கிறார் என்று விமர்சித்திருக்கிறது.

‘பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஏற்கெனவே பிளவுபடுத்தல்களும் வெறுப்பும் நிலவிவரும் நிலையில், துயரமான சம்பவங்களை அழுத்தமான காட்சிகளுடன் சித்தரிப்பது என்பது, மோசமான உணர்வுகளைத் தூண்டி அமைதியைக் குலைக்கச் செய்யும்’ என்றும் மகாராஷ்டிர சீக்கியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

விவேக் விளக்கம்

ஆனால், படத்தின் கதைக்களம் பற்றி இன்னும் முடிவுசெய்யவில்லை என விவேக் அக்னிஹோத்ரி விளக்கமளித்திருக்கிறார்.

“எந்த அமைப்பு இப்படி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு இந்தியன். இறையாண்மை கொண்ட நாட்டில் வசிப்பவன். எனது கருத்துகளை நான் விரும்பும் வகையில் வெளிப்படுத்த எனக்கு எல்லா உரிமைகளும் உண்டு. எனது மனசாட்சி சொல்வதற்கு இணங்க எதை வேண்டுமானாலும் நான் படமாக்குவேன். யாருடைய நிபந்தனைக்கும் கட்டுப்பட நான் யாருக்கும் வேலைக்காரன் அல்ல” என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், “நான் எதைப் படமாக்கப்போகிறேன், ஏன் படமாக்குகிறேன் என்று அறிவிக்கவேயில்லை. ஆனால், மக்கள் எதையெதையோ ஊகித்துக்கொள்கிறார்கள். எதை வேண்டுமானாலும் மக்கள் அனுமானித்துக்கொள்ளலாம். ஆனால், நான் எந்த வகையான படத்தை எடுக்கலாம் என்பதையும், அது வெளியிடப்பட வேண்டுமா இல்லையா என்பதையும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழுதான் தீர்மானிக்க வேண்டும்” என்றும் விவேக் அக்னிஹோத்ரி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in