தசராவை முன்வைத்து தகிக்கும் மகாராஷ்டிர அரசியல்!

தந்தை பால் தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரே
தந்தை பால் தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரேகோப்புப் படம்

தசரா கொண்டாட்டத்தை முன்வைத்து மகாராஷ்டிர அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதையொட்டி, உத்தவ் தாக்கரே தரப்பும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பும் வெளியிட்டுவரும் வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

1966 முதல் சிவசேனா கட்சி, சிவாஜி பார்க்கில்தான் தசரா கொண்டாட்டத்தை நடத்தும். நிகழ்ச்சியில் உரையாற்றும் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே, ‘எனது இந்து சகோதரர்களே, சகோதரிகளே, தாய்மார்களே!’ என்று தனது உரைகளைத் தொடங்குவார். தற்போது, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு பிரிவு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு பிரிவு என இரு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது சிவசேனா. இரு தரப்பும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா எனக் கூறிவருகின்றன. தங்களை நிரூபிக்க தேர்தல் ஆணையத்தையும் அணுகியிருக்கின்றன.

ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே

இந்தச் சூழலில், சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரே தரப்பு தசரா கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தவிருக்கிறது. எம்எம்ஆர்டிஏ-வின் பிகேசி மைதானத்தில் தசரா கொண்டாட்டக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு.

கடந்த வியாழன் அன்று (செப்.29) ஏக்நாத் ஷிண்டே தரப்பு வெளியிட்ட டீஸர் வீடியோ உத்தவ் தாக்கரே தரப்பை உசுப்பேற்றும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. அதில், கட்சியின் தேர்தல் சின்னமான வில்லும் அம்பும் இடம்பெற்றிருந்தன. கூடவே, சிவசேனாவின் லோகோவான சீறும் புலியின் படமும் இருந்தது. அதில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயின் படமும், மறைந்த தலைவர் ஆனந்த் திகேயின் படமும் இடம்பெற்றிருந்தன. ‘பேரரசர் சிவாஜியின் காவிக் கொடிதான் சிவசேனாவின் காவிக் கொடி. இந்துத்வா கொடியான காவிக் கொடி தொடர்ந்து வானில் படபடத்துக்கொண்டிருக்க வேண்டும்’ என்று பால் தாக்கரே பேசும் உரையும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவை ஏக்நாத் ஷிண்டேவே ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அன்று இரவே உத்தவ் தாக்கரே தரப்பு ஒரு டீஸர் வீடியோவைப் பகிர்ந்தது. அதில் கட்சி சின்னம், சீறும் புலி ஆகிய படங்களுடன் மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகமான சேனா பவனில் வைக்கப்பட்டிருக்கும் பால் தாக்கரேயின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.
35 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவின் தொடக்கத்தில், தனது தந்தை பால் தாக்கரே போலவே ‘எனது இந்து சகோதரர்களே...’ என மகாராஷ்டிர இந்து சமூக மக்களை விளித்துப் பேசுகிறார்.

மேலும், ‘ஒரு தலைவர், ஒரு கொடி மற்றும் ஒரே மைதானம்... அக்டோபர் 5 மாலை 6.30 மணிக்கு சிவாஜி பார்க்கில் பாரம்பரியமான தசரா கூட்டத்தைக் காணுங்கள்’ என்று உத்தவ் தாக்கரே தரப்பு ட்வீட் செய்திருந்தது.

அடுத்த சில மணி நேரத்தில், ஏக்நாத் ஷிண்டே தரப்பு இன்னொரு வீடியோவை வெளியிட்டது. அதில் இந்துத்வக் கொள்கைகள் குறித்து பால் தாக்கரே பேசும் குரல் பதிவுகள் இடம்பெற்றிருந்தன.

இந்துத்வக் கொள்கை கொண்ட சிவசேனா கட்சி, பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தது இந்துத்வக் கொள்கைக்கு விரோதமானது என்று சொல்லித்தான் ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனாவைப் பிளவுபடுத்தி உத்தவ் தாக்கரே ஆட்சியைக் கவிழ்த்தது. அத்துடன் தீவிர இந்துத்வக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. இந்துத்வக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக உத்தவ் தாக்கரேயைத் தொடர்ந்து விமர்சித்தும்வருகிறது. தசரா கொண்டாட்டம் தொடர்பான விவாதங்களில் இதை மீண்டும் வலுவாக முன்வைக்கிறது ஷிண்டே தரப்பு.

மறுபுறம், “ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருப்பதால் மட்டுமே அது அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. பாலாசாகேப்பின் உண்மையான வாரிசு உத்தவ் தாக்கரேதான். அதை நீங்கள் எடுத்துக்கொண்டுவிட முடியாது. மீண்டும் மீண்டும் சொல்லும் பொய் ஒருபோதும் உண்மையாகிவிடாது. அவர்கள் மராத்தியர்களின் வாக்குகளைப் பிரிக்க விரும்புகின்றனர். டெல்லிக்குப் பணிந்து தலை வணங்குகின்றனர்” என உத்தவ் தாக்கரேயின் ஆதரவாளரும் மும்பையின் முன்னாள் மேயருமான கிஷோரி பெட்ணேகர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, “தசரா கூட்டம் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், சிவசேனா கொள்கைதான் முக்கியம். நான் அயராமல் வேலை செய்யும் முதலமைச்சர். பணியின் மூலமே பதில் சொல்வேன். அதனால்தான், என்னைப் பார்த்து பலர் பயப்படுகின்றனர்” என்றார். தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சி அமைப்புகள் தங்களுக்கே ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அக்டோபர் 5-ம் தேதி நடக்கவிருக்கும் போட்டி தசரா கூட்டங்களில் அனல் தெறிக்கப்போவது நிச்சயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in