3 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மதுரை-பழனி, பழனி- கோவை ரயில்கள் ஒரே ரயிலாக இயக்கம்!

3 மாவட்ட மக்களுக்கு ஹேப்பி நியூஸ்: மதுரை-பழனி, பழனி- கோவை ரயில்கள் ஒரே ரயிலாக இயக்கம்!

மதுரை- பழனி, பழனி- கோவை ரயில்கள் செப்.1 முதல் ஒரே ரயிலாக இயக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கோவையை தென்மாவட்டங்களோடு இணைக்கும் ரயில்கள் பற்றிய 6 கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `மதுரையிலிருந்து பழனி வழியாக கோயம்புத்தூர் வரை ஓடிக்கொண்டிருந்த புதுப்பெட்டிகளைக் கொண்ட ரயில் கரோனாவுக்கு பின்பு மதுரைக்கும் பழனிக்கும் இடையே ஒரு ரயிலாகவும், பழனிக்கும் கோயம்புத்தூருக்கும் இடையே இன்னொரு ரயிலாகவும் இயக்கப்பட்டு வந்தது. இதனை ஒரே ரயிலாக இயக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1 முதல் மதுரையிலிருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக கோயம்புத்தூருக்கு ஒரே ரயிலாக இயக்க கால அட்டவணையும் உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி தலைவர்கள் என்னிடம் அளித்த 5 கோரிக்கைகளை ஆகஸ்ட் 18-ம் தேதி பொது மேலாளருக்கு அனுப்பி வைத்தேன். அவர் அந்த கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலிக்க குறிப்பிட்ட துறையினருக்கு அனுப்பி உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் எனக்கு ஆகஸ்ட் 24 அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் நாம் எழுப்பி உள்ள கோரிக்கைகளாக திருச்செந்தூர் விரைவு வண்டியை கிணத்துக்கடவு, கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்துக்கு இயக்க வேண்டும். மதுரை- கோயம்புத்தூர் இடையே ஓடிக்கொண்டிருந்த நகர இடை விரைவு வண்டியை அதிவிரைவு வண்டியாக உயர்த்தி தூத்துக்குடி இருந்து மீண்டும் இயக்க வேண்டும்.

ராமேஸ்வரத்திற்கும், கோயம்புத்தூருக்கும் இடையே ஓடிக்கொண்டிருந்த விரைவு வண்டியை மீண்டும் உடனே இயக்க வேண்டும். அதிகாலையில் ஓடிக்கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கும் கோயம்புத்தூருக்குமான பழனி வழியாக ஓடிக் கொண்டிருந்த பயணி வண்டியை மீண்டும் இயக்க வேண்டும். திருநெல்வேலிக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் தென்காசி, கோயம்புத்தூர் வழியான விரைவு வண்டியை நிரந்தர வண்டி ஆக்கி வாரத்தின் அதிக நாட்கள் ஓடும்படி அமல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை பொது மேலாளர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கருத்துகளையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இயக்கிட வேண்டும் என்றும் அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோருகிறேன்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in