நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது அக்னிபத் : மதுரை எம்.பி வெங்கடேசன் ஆவேசம்

நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது அக்னிபத் : மதுரை எம்.பி வெங்கடேசன் ஆவேசம்
செய்தியாளர்களை சந்தித்த மதுரை எம்பி

மதுரையில் அக்னிபத் மற்றும் ரயில்வேயை தனியார் மயமாக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேசிய பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அக்னிபத் மற்றும் தனியார் ரயில் சேவையை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒன்றிய அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராணுவத்திற்கு 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் என்ற திட்டத்தை அமல்படுத்த முன்வந்துள்ளது.

ராணுவத்தில் உள்ள 41 படைகலன்களுக்கு ஆயுதம் உற்பத்தி செய்து கொடுக்கக் கூடிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த படைக்கலன்களை கைகழுவி, தனி கார்ப்பரேஷன்களாக ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம், எந்த தனியார் நிறுவனத்திடமிருந்தும் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஏற்பாட்டில் இத்திட்டம் உள்ளது.

அதன்படி இன்றைக்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் ராணுவத்திற்கு தேவையான துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை தயாரித்து வருகிறது. இந்திய ராணுவத்தில் தயாரித்த ஆயுதங்களை நம்பாமல் இன்றைக்கு ஒன்றிய மோடி அரசு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் ஆயுதங்களை நம்பியுள்ளது. அந்த அடிப்படையில் ராணுவத்தில் இளைஞர்களை ஒப்பந்த முறையில் பணிக்கு சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த நாட்டைப் பாதுகாக்கும் ராணுவத்தில் உச்சபட்ச தியாகத்தை கோருகின்ற ராணுவ இளைஞர்களை எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் நிர்க்கதியாக்கி உள்ளது. இந்த நிலை தேசத்தின் பாதுகாப்பையும், ராணுவத்தில் வீரத்தையும், இளைஞர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. எனவே தான், வட இந்தியா முழுவதும் இத்திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இளைஞர்களின் வேலைவாய்ப்பை கேள்விக்குறியாக்கும், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பதால் இந்த திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது" என்று அவர் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்," தென்னகத்தில் இருந்து இரண்டாவது தனியார் ரயிலை இயக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. தனியார் ரயில் சேவையால் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ரயில் பயணத்தில் உள்ள சேவை திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக தனியார் ரயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை இல்லை. பெண்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேர்வெழுத செல்பவர்களுக்கு சலுகைகள் ரத்து செய்யப்பட்டு லாப நோக்கத்துடன் மட்டுமே தனியார் ரயில் சேவை செயல்படுத்தப்படும். எனவே, இந்த தனியார் ரயில் இயக்கத்தையும், அக்னிபத் திட்டத்தையும் கைவிட வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in