அக்னிபத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ரயில் மறியல் போராட்டம்: தடுத்த போலீஸ்காரர் கன்னத்தில் பளார்!

கைதான நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்
கைதான நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை கைவிடக் கோரியும், ரயில்வேயை தனியாருக்கு கொடுக்கும் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதுரை ரயில்நிலைய முற்றுகை போராட்டம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலைமுன்பாக 300-க்கும் மேற்பட்டோர் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில் கூடி பேரணியாக ரயில் நிலையம் நோக்கி சென்றனர்.

காவல்துறையினருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு
காவல்துறையினருக்கும் கட்சிக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு

இந்நிலையில், ரயில் நிலையத்தின் கிழக்கு வாசல் முன்பாக 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களைத் தடுக்க முற்பட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி ஏறிக் குதித்து ரயில் நிலையத்திற்குள் 50- க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட கட்சியினர் சென்றதால் பரபரப்பு நிலவியது.

அதில், சிலர் தடுப்புகளையும் மீறி ரயில் நிலையத்தின் முதல் நடை மேடை வரை சென்று ரயில் மறியலில் ஈடுபட முற்பட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், கட்சியினர் கையில் இருந்த கட்சிக் கொடியை பிடுங்கிச் சென்றார். இதனைத் தொடர்ந்து, கட்சியினர் அவரை சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர்.

பேரிகேட் அமைத்து தடுத்த காவல்துறையினர்
பேரிகேட் அமைத்து தடுத்த காவல்துறையினர்

போராட்டத்தின் போது ரயில் நிலையத்தினுள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது ஆயுதப்படை தலைமை காவலர் மணிராஜை கட்சிக்காரர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, ஒரு மணி நேர மறியலுக்குப் பின்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300 பேரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in