கோயில் பெயரால் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்கவும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில் பெயரால் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்கவும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்களின் பெயர்களில் தனிநபர்கள் நடத்தி வரும் இணையதளங்களை முடக்க வேண்டும் என மதுரை  உயர் நீதிமன்றக் கிளை  உத்தரவிட்டுள்ளது. 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் 'தருமபுரம் ஆதீனத்தின் கீழ் உள்ள  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர்  கோயிலில்,  அறுபதாம் கல்யாணம் நடத்த கோயில் நிர்வாகம் ரூ.2 ஆயிரம் மட்டும் கட்டணம் வசூலிக்கிறது.  ஆனால் இந்தக்கோயில் பெயரில் தனி நபர்கள் பலர் இணையதளம் தொடங்கி, அறுபதாம் கல்யாணத்துக்கு ரூ.2 முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் வசூலித்து மோசடி செய்கின்றனர். 

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பெயரில் தனி நபர்கள் நடத்தி வரும் அனைத்து இணையதளங்களை முடக்கவும், கோயில் சொத்துக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய  அமர்வு இன்று உத்தரவு  பிறப்பித்த உத்தரவில், 'கோயில்கள் பெயரில் தனி நபர்கள் இணையதளம் நடத்தக்கூடாது. கோயில் பெயரில் இணையதளம் நடத்துவோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும். கோயில்கள் பெயர்களில் நடத்தப்படும் இணையதளங்களை உடனடியாக முடக்க வேண்டும். அந்த நடவடிக்கை தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in