
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாதநிலையில் தற்போது ரூ.140 கோடிக்கு கட்டும் புதிய கட்டிடங்களில் ஒரு வாகனத்தை கூட நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தாமல் கட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகள் ஒரே வளாகத்தில் அமைந்திருந்தால் மட்டுமே நோயாளிகள் தடையின்றி சிகிச்சைப்பெறவும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் வார்டுகளுக்கு சென்று வருவதற்கும் வசதியாக இருக்கும். அதனால், அனைத்து மருத்துவ சிகிச்சைப்பிரிவு கட்டிடங்களும் ஒரே வளாகத்தில் இருக்கும்படி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் கட்டப்படுகின்றன. ஆனால், மதுரையில் மட்டும் விதிவிலக்காக பவளவிழா கண்ட மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, வெவ்வேறு மூன்று இடங்களில் செயல்படுகின்றன. பழைய மருத்துவக்கட்டிடம் கோரிப்பாளையம் பனங்கல் சாலையிலும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்திலும், அவசர விபத்து சிகிச்சைப்பிரிவு கட்டிடம் அண்ணா பஸ்நிலையம் அருகேயும் உள்ளன. அதனால், நோயாளிகள், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் பெரும் சிரமப்படுகிறார்கள். டீனும், வெவ்வேறு இடங்களில் உள்ள மருத்துவ சிகிச்சைப்பிரிவு செயல்பாடுகளை கண்காணிப்பதிலும், ஆய்வு செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
அதுபோல், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தவிர, கோரிப்பாளையம் பழைய மருத்துவக்கட்டிடம், அண்ணா பஸ்நிலையம் அவசர விபத்து சிகிச்சைப்பிரிவுகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், மற்ற பணியாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லை. ஆங்காங்கே சந்துபொந்துகளில் உள்ள பார்க்கிங் இடங்களில் நிறுத்துகின்றனர். அப்படியிருந்தும் இந்த மருத்துவமனையை புறநகர் பகுதிக்கு கொண்டு சென்று மற்ற மாவட்டங்களை போல் ஒரே வளாகத்தில் மிகப்பெரிய மருத்துவமனையாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சீமாங் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவு கட்டியப்போதும் அந்த கட்டிடத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படவில்லை. தற்போது கோரிப்பாளையம் பழைய மருத்துவக் கட்டிடப்பிரிவு வளாகத்தில் பழமையான கட்டிடங்களை இடித்துவிட்டு, தற்போது ஜைக்கா திட்டத்தில் ரூ.140 கோடிக்கு பிரம்மாண்டமான புதிய மருத்துவப்பிரிவு கட்டிடங்கள், மருத்துவமனையின் நுழைவுவாயில் முகப்பு தோற்றம் போன்றவை கட்டப்படுகிறது. புதிதாக கட்டப்படும் இந்த கட்டிடங்களுக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அந்த கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.
ஏற்கெனவே பழைய மருத்துவப்பிரிவு கட்டிடங்களுக்கு வருவோருக்கே பார்க்கிங் வசதி இல்லாதநிலையில் புதிய கட்டிடங்களும் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டப்படுவதால் அவை செயல்பட ஆரம்பிக்கும்போது இன்னும் நெரிசல் ஏற்படும். மருத்துவமனை வளாகங்களில் குறுக்கும், நெடுக்குமாக வானங்களை தற்போது போல் நிறுத்துவார்கள். அதனால், மருத்துவமனை வளாகத்தில் நெரிசல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சைகள் நோயாளிகளுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒரு வாகனத்தை கூட நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாமல் புதிய கட்டிடங்கள் தற்போது கட்டப்படுகிறது. இதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. பார்க்கிங் வசதி இல்லாத தனியார் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்காத மாநகராட்சி எப்படி பெரிய மருத்துவமனை கட்டிடம் கட்டும்போது பார்க்கிங் வசதி இல்லாமல் அனுமதிக்கிறது என்பது தெரியவில்லை. மருத்துவமனை வளாகத்தில் இனி நினைத்தால் கூட பார்க்கிங் வசதி ஏற்படுத்த முடியாது. மருத்துவமனை எதிரே பனங்கல் சாலையில்தான் அமெரிக்கன் கல்லூரி கட்டிடத்தையொட்டி பார்க்கிங் வசதி ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு’’ என்றார்.