
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கிய மதுரை தம்பதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
குற்றாலம் மெயின் அருவி நுழைவுவாயில் அருகில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இங்கு மதுரை மாவட்டம், திருநகரைச் சேர்ந்த மகாலிங்கம்(55), அவரது மனைவி காமாட்சி, மகள் பிரியா ஆகியோர் அறை எடுத்துத் தங்கினர். கடந்த 30-ம் தேதியில் இருந்தே இந்த மூவரும் இங்கு தங்கிவந்தனர். இவர்களது அறை இன்று வெகுநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. விடுதி ஊழியர்கள் சந்தேகப்பட்டு அறையின் கதவை உடைத்துப் பார்த்தபோது அறைக்குள் மகாலிங்கம், காமாட்சி ஆகியோர் விஷம் அருந்தி சடலமாகக் கிடந்தனர். அவர் மகள் பிரியா உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
பிரியாவை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இதுதொடர்பில் நடத்திய விசாரணையில் மகாலிங்கத்திற்கு கடன் பிரச்சினை இருந்ததும், நான்கு மாதங்களுக்கு முன்பு மகாலிங்கத்தின் மகனும் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து குற்றாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.