மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குமா?: பட்ஜெட்டில் 1,900 கோடி ஒதுக்கப்படுவதாக தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்குமா?: பட்ஜெட்டில் 1,900 கோடி ஒதுக்கப்படுவதாக தகவல்

``மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு 1,900 கோடி மத்திய பட்ஜெட்டில்
அனுமதிக்கப்பட உள்ளது'' என மத்திய சுகாதார  துறை  இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  எய்ம்ஸ்  மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து,  2018 ஜூனில் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பப்பட்டது. இதன் பின்,  6 மாதம் கழித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 2019-ம் ஆண்டு  நாடாளுமன்ற தேர்தல்  நெருங்கி வந்த வேளையில் 750 படுக்கை வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு 2019 ஜனவரி 27-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆயிரத்து 264 கோடி மதிப்பில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது.

150 படுக்கை வசதிகளுடன்  தொற்று நோய் தடுப்பு  பிரிவு  தொடங்க புதிய திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனால்,    திட்ட மதிப்பீடு 1,264 கோடியில் இருந்து 1977.8  கோடியாக உயர்த்தப்பட்டது. இதன்பிறகு,  ஜெய்காவுடன் கடனுதவி ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதி 1977.8 கோடியில் 82  சதவீத தொகை 1,627.7 கோடி ஜெய்கா நிறுவனம் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் 2026க்குள் எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென  ஒப்பந்தம் மூலம்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெய்கா நிறுவனத்தின் அதிதி பூரி, ரியோ ஒகுச்சி, எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் நாகராஜன், இயக்குநர் ஹனுமந்தராவ் மற்றும் கட்டுமான பொறியாளர் குவினர்  ஆகியோர்  தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர். எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான முன்மொழிவு கோரிக்கைக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 3 மாதங்களில் கட்டுமான பணிக்கான  விலைப்புள்ளி (டெண்டர்) நிறைவுற்று, 6 மாதங்களில் கட்டுமான வடிவமைப்பு  உள்ளிட்ட ஆயத்த பணிகள் முடிந்து ஓராண்டிற்குள்  பணிகள் தொடங்கும் என இயக்குநர் ஹனுமந்தராவ் நவம்பர் முதல் வாரத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு 1,900 கோடி மத்திய பட்ஜெட்டில்
அனுமதிக்கப்பட உள்ளது என, மத்திய சுகாதார  துறை  இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதார துறையின் கீழ் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மருத்துவ நலத்திட்டங்களின் நிலை குறித்து, மத்திய சுகாதார
துறை அமைச்சர் பிரவின் பாரதி பவார்  செங்கல்பட்டு  கலெக்டர் ராகுல் நாத் உள்ளிட்டோருடன் நேற்று ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, பிரவின் பாரதி பவார்  கூறுகையில். ''தமிழகத்தில்,  மகப்பேறு பிரசவத்தின்போது, தாய், சேய் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.  மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரும் நிதி ஆண்டுக்கான (2023-2024) மத்திய பட்ஜெட்டில், 1,900  கோடி
அனுமதிக்கப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in