மோசமான மழைநீர் கட்டமைப்பு; சாலைகளில் புரளும் வெள்ளம்: சில மணி நேர மழைக்கே முடங்கும் மதுரை!

மோசமான மழைநீர் கட்டமைப்பு; சாலைகளில் புரளும் வெள்ளம்: சில மணி நேர மழைக்கே முடங்கும் மதுரை!

மதுரை மாநகரில் வைகை ஆறு, கண்மாய்கள் போன்ற ஏராளமான நீர் ஆதாரங்கள் இருந்தும், மழைநீரை சேமிப்பதற்கு மழைநீர் கால்வாய் கட்டமைப்பு இல்லாததால் மழைக்காலத்தில் மதுரை வெள்ளத்தில் தத்தளிப்பதோடு, மழைநீரும் சேமிக்கப்படாமல் வீணாகி வருகிறது.

மதுரை மாநகராட்சியில் மக்கள்தொகை 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள் அடர்த்தி மிகுதியால் நகர்பகுதியில் சிறு காலியிடங்களை கூட வீணாக்காமல் தனியார் கட்டிடங்களை கட்டி வாடகைக்குவிட்டுள்ளனர். அதனால், நகர்பகுதியில் நாளுக்கு நாள் வாகனப் பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துவிட்டது. தற்போது அடுத்தக்கட்டமாக குடியிருப்புகள் முதல் மாநகராட்சி சாலைகள், நெடுஞ்சாலைத்துறை சாலைகள் வரை மழைநீர் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மழைக்காலத்தில் பெய்யும் மழைநீர் அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு வழிந்தோடுவதற்கு வசதி இல்லாமல் மாநகரச் சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாகிவிட்டது.

முக்கிய சாலைகளில் மழைநீர் கால்வாய்கள் இருந்தாலும் அவற்றில் சுற்றுவட்டார மக்கள் குப்பைகள், கட்டிடக்கழிவுகளை கொட்டியும், முட்புதர்கள் நிறைந்தும் அவை சரியாக பராமரிக்கப்படவில்லை. தற்போது பெய்யும் தென்மேற்கு பருவமழை, அதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் வருகிறது. அதற்காக பெயரளவுக்கு கூட தற்போது மாநகராட்சி மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை. அதனால், கடந்த ஒரு வாரமாக மதுரையில் பெய்யும் மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மழைபெய்யும் நேரத்தில் மக்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். சாலையோரங்களில் ‘பார்க்கிங்’ செய்த கார், இருசக்கர வாகனங்களை வெள்ளம் மூழ்கடிப்பதால் மக்கள் அவற்றை எடுக்க முடியவில்லை.

நேற்று மதுரை மாநகரில் மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு நான்கு மாசி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் ரயில்வே சுரங்கப்பாதை, சிம்மக்கல் ரவுண்டானா, சிம்மக்கல் சொக்கநாதர் சன்னதி, ராஜாமில் சாலை கர்டர் பாலம், மதுரை கே.புதூர் பஸ்நிலையம் முதல் ஐடிஐ சாலை சந்திப்பு வரை, கோரிப்பாளையம் சிக்னல் முதல் தல்லாக்குளம் தமுக்கம் மைதானம் வரை, காந்திமியூசியம் சாலை, சேதுபதி பள்ளி சாலை, பழங்காநத்தம் ரவுண்டானா போன்ற நகரின் முக்கிய 50க்கும் மேற்பட்ட சாலைகள், மழை வெள்ளத்தில் மூழ்கின. ஒட்டுமொத்த நகரப்போக்குவரத்தும் இந்த நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இயக்கப்பட்ட சில மாநகர பஸ்கள், மின்தடை ஏற்பட்டதால் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மழைக்குள் மக்கள் சிக்கி கொண்டனர்.

நேற்று சனிக்கிழமை என்பதால் மாலை நேரங்களில் மக்கள் குடும்பத்துடன் கார், இரு சக்கர வாகனங்களில் ஷாப்பிங் சென்றிருந்தனர். சினிமா தியேட்டர்கள், மால்களுக்கும் குழந்தைகளுடன் சென்றிருந்தனர். அதுபோல் அலுவலங்களுக்கு சென்றிருந்தவர்களும் இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். தற்போது ரூ.159 கோடியில் பிரமாண்டமாக புதிய பேருந்து நிலையம் கட்டியும் வழக்கம்போலேவே மழைக்காலத்தில் அப்பகுதி தண்ணீர் மிதக்கிறது.

இது குறித்து மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்த பொறியாளர் கார்த்தியேன் கூறுகையில், ‘‘சிங்கப்பூர், மலேசியாவில் சாலைகளின் இரு புறமும் மழைநீர் புகும் வகையில் கம்பிகளை கொண்டு மூடப்பட்ட திறந்த வெளி மழைநீர் கால்வாய்கள் அமைத்துள்ளனர். அங்கு மக்கள் தனிப்பட்ட முறையில் ஆழ்துளை கிணறு போடுவதற்கு அனுமதியில்லாததால் மழைநீரை மறுசூழற்சி செய்து மக்கள் உபயோகத்திற்கு வழங்குகிறது. ஆனால், மதுரையில் குறைந்தப்பட்சம் நீர்நிலைகளுடன் சாலையோர கால்வாய்களை இணைக்கும் திட்டம் கூட இல்லை. மாசி வீதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் சிமெண்ட் சாலை போட்டுள்ளனர். அதனால், அங்கு பெய்யும் தண்ணீர் பூமிக்குள் செல்லாமல் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இப்பகுதியில்தான் மதுரையின் ஒட்டுமொத்த நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் உள்ளன. மக்கள் தினமும் திருவிழா போல் இப்பகுதியில் திரள்கின்றனர். ஆனால், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் வெளியேற்றுவதற்கு எந்த திட்டமும் இல்லை” என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in