
சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நடைபெற்ற தமிழ் தேர்வில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட வினாத் தாள்களையே இந்த ஆண்டும் கொடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று இரண்டாம் ஆண்டிற்கான மூன்றாவது செமஸ்டர் தமிழ்த் தேர்வு இன்று நடைபெற்றது. தற்போதைய செமஸ்டர் தேர்விற்கான வினாத் தாள்களுக்குப் பதிலாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற 4-வது செமஸ்டர் தேர்வு வினாத் தாள்கள் மாணவர்களின் தேர்வின் போது விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். மேலும் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து கல்லூரிகள் தரப்பில் பல்கலைக் கழகத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாகச் சென்னை பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டு, மீண்டும் அந்த தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.