பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு  உதவித்தொகை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பார்வை மாற்றுத்திறனாளிகள்  எந்தவித சிரமமும் இல்லாமல் அரசின் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள்  பெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் பிற மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படுவது போல பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக 1,500 ரூபாய் வழங்கக்கோரி நேத்ரோதயா  அமைப்பு கடந்த 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில், " மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக செயல்படுத்தும் நிலையில்  பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் சமூக நலத்துறை மூலம்  செயல்படுத்துவதால் பல்வேறு இன்னல்களை  சந்திக்க நேர்கிறது. அதனால்  பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்களையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு மாற்ற வேண்டும்" எனக் கோரப்பட்டது.

இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பொது வேலை வாய்ப்பில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாக விளக்கமளித்தது.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகள் மத்திய அரசு திட்டம் மூலம் வழங்கப்படுவதால் சமூக நலத்துறை மூலம் இத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், பார்வை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற மாவட்டம் தோறும் வருவாய் கோட்டாட்சியர்கள் அதிகாரிகளாக நியமித்து, பார்வை மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என அரசுத்தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தை பதிவு செய்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, அரசின் உத்தரவாதத்தின் அடிப்படையில் பார்வை மாற்றுத்திறனாளிகள், எந்தவித சிரமமும்  இல்லாமல்  உதவித்தொகை உள்ளிட்ட சலுகைகள் பெறுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட, வயதான பார்வை மாற்றுத்திறனாளிகளை, மற்ற பிரிவினருக்கு இணையாக  கருதுவது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in